நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் கரூரில் நடந்த துயர சம்பவம் காரணமாக படம் ரிலீஸ் இன்னும் ஓரிரு மாதங்கள் வரை தள்ளிப் போகலாம் என்ற ஒரு பேச்சும் அடிபட்டு வருகிறது. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்னும் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே ஜனநாயகன் படத்தில் இருந்து விஜய் அவரது சொந்தக்குரலில் பாடிய ஒரு பாடலை பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக கடந்த 5ம் தேதியே படக்குழு வெளியிட திட்டமிட்டு இருந்தது. ஆனால் கரூரில் நடந்த துயர சம்பவம் காரணமாக அந்த பாடல் வெளியீடு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.
இப்போது உச்சநீதிமன்றத்தில் கரூரில் நடந்த சம்பவம் குறித்து நடந்த விசாரணையில், இதற்கு சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தவெக தலைவர் விஜய்க்கும் தவெக கட்சிக்கும் ஒரு ஆதரவான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. அதனால் தவெக கட்சியினர் மத்தியில் சற்று ஆறுதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வருகிற நவம்பர் 25ம் தேதி ஜனநாயகன் படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட்டு விடலாம் என்று படக்குழு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வருகிற 17ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல இருக்கிறார். அதனால் இப்போதைய நிலமை சற்று மாறிவிடும். அதனால் நவம்பர் 25ம் தேதி வரை தள்ளிப் போடாமல் வருகிற தீபாவளிக்கு பர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிடலாம் என்றும் படக்குழுவுக்கு ஒரு யோசனை இருந்து வருகிறது.
ஏனெனில் தீபாவளி என்பது பரபரப்பான ஒரு பண்டிகை நாளாகும். அந்த நாளில் புதிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன. தீபாவளி கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக ஜனநாயகன் படப் பாடலும் வெளியானால் அந்த கொண்டாட்டங்களில் ஒன்றாக மாறிப்போகும். தனியாக வரும்போதுதான் மக்கள் மத்தியில் அதிக கவனமும் அதே நேரத்தில் நெகடிவ் விமர்சனமும் எழும் என்றும் படக்குழு ஆலோசித்து வருகிறது.
அதனால் வருகிற 20ம் தேதி தீபாவளிக்கு ஜனநாயகன் படத்தில் இருந்து விஜய் சொந்தக் குரலில் பாடிய முதல் பாடல் வெளியாகலாம். ஒருவேளை அது கேன்சலாகும் பட்சத்தில் நவம்பர் 25ம் தேதி அந்த பாடல் ரிலீஸ் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் டிசம்பர் மாதம் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் திட்டமிட்டப்படி நடக்குமா என்பதை இன்னும் ஜனநாயகன் படக்குழு தரப்பில் இருந்து உறுதி செய்யவில்லை.





