தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆகும் படங்கள் பற்றி அறிவிக்க, பலவிதமான விளம்பர யுக்திகள் இப்போது கையாளப்படுகின்றன. துவக்கத்தில் இருந்தே படம் பற்றிய புதுப்புது அப்டேட்டுகளை கொடுத்து கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை, ஆர்வத்தை ஏற்படுத்துவது இப்போது டிரெண்டிங் ஆகி விட்டது. இதற்கு சமூக வலைதளங்கள் பெரிய அளவில் சினிமாத்துறைக்கு உதவுகிறது.
அந்த வகையில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும் முன்பாக, அதில் நடித்த நட்சத்திரங்கள், டைரக்டர் உள்ளிட்டோர் பிரமோஷன் என்ற பெயரில் ரசிகர்களை சந்திக்கின்றனர். இசை வெளியீட்டு விழா நடத்துகின்றனர். படம் ரிலீஸ் ஆன சில தினங்களில், வெற்றி விழா நடத்தி, அதையும் டிரெண்ட் ஆக்கி விடுகின்றனர். அந்த படம் சார்ந்த இதுபோன்ற விஷயங்கள், அந்த படத்தின் வெற்றியை மேலும் உறுதிபடுத்துகிறது.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்கள் கூட இதில் விதிவிலக்கல்ல. கமல்ஹாசன் தன் படத்தின் பிரமோஷனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். ரஜினி, இசை வெளியீட்டு விழாவில் கட்டாயம் பங்கேற்று பேசுகிறார்.
ஆனால், இதுபோன்ற பிரமோசன், வெற்றி விழா நிகழ்ச்சிகளில் சில நடிகர் நடிகைகள் கலந்துகொள்வது இல்லை. உதாரணமாக தமிழில் நடிகர் அஜித்குமார் இதை தவிர்த்து விடுகிறார். நடிகை நயன்தாராவும் இதே நிலையில் இருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஷாருக்கான் – நயன்தாரா நடித்த ‘ஜவான்’ படம் வெளியானது. அட்லீ இயக்கிய இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு ஷாருக்கான், நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்தார். அவர் பங்கேற்கவில்லை. படம் ரிலீஸ் ஆன பின்பு, மும்பையில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. இதிலும் நயன்தாரா கலந்து கொள்ள வராதது, ஷாருக்கானுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்தது.
ஆனால், கடந்த திங்கட்கிழமை மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், தனது கணவர் விக்கியுடன் நயன்தாரா பங்கேற்றார். உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பது, இந்தி திரையுலகினர் மத்தியில் கவனத்தை ஈர்க்கும். பாலிவுட்டிலும் தன் நடிப்பை விஸ்தரிக்கலாம் என்பது நயன்தாராவின் திட்டமாக இருக்கலாம். அதே வேளையில், பாலிவுட்டின் மெகா ஸ்டரான ஷாருக்கான் அழைப்பை ஏற்று படத்தின் பிரமோஷனுக்கு வராமல், அம்பானி வீட்டுக்கு நயன்தாரா சென்றது, ஷாருக்கானை பயங்கர கடுப்பேற்றி உள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன,





