நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை எச் வினோத் டைரக்ட் செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு ஜனநாயகன் என நேற்று முன்தினம் குடியரசு தினத்தன்று டைட்டில் அறிவிக்கப்பட்டது.
அதே நாளில் மக்கள் கூட்டம் பின்னணியில் இருக்க, வாகனத்தின் மீது நின்றபடி விஜய் செல்பி எடுக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காலையிலும், சவுக்கை சுழற்றியபடி நான் ஆணையிட்டால் என்ற ஆங்கில வாசகங்களோடு விஜய் காணப்பட்ட செகண்ட் லுக் போஸ்டர் மாலையிலும் வெளியிடப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக உள்ள விஜய் இதுதான் தனது கடைசி படம் என அறிவித்து விட்டார். அதனால் இந்த படத்துக்கு அவரது அரசியல் சார்ந்த ஒரு டைட்டில் வைக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனெனில் அப்போது அரசியலிலும் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதினர்.
அதனால் விஜய் நடிகராக அறிமுகமான முதல் படம் நாளைய தீர்ப்பு. அதுவே அவரது கடைசி படத்தின் டைட்டிலாக வைக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. இது எந்த நடிகருக்கும் அமையாத ஒரு வாய்ப்பு. விஜய்க்கு தானாக அமைகிறது. நிச்சயம் இப்படி ஒரு பெயர் அவரது அரசியல் பயணத்துக்கும் ஒரு பெரிய அதிர்வை தரும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் குடியரசு தினத்தன்று வெளியான விஜய் 69 படத்தின் டைட்டில் ஜனநாயகன் என்பது உறுதியானது. ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது மாபெரும் வெற்றிப் படமாகும்.
அதே போல் நடிகர் அஜீத்குமார் பல ஆண்டுகளுக்கு முன்பே நடித்த படம் ஜனா. இந்த படத்தில் சினேகா ஜோடியாக நடித்திருப்பார். அதனால் அஜீத் நடித்த ஜனா, கமல் நடித்த நாயகன் பட தலைப்புகளை காப்பியடித்து ஜனநாயகன் என விஜய் படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டதாக புதிய தகவலை இணையத்தில் கிளப்பி விட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.





