ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஜப்பான்”. இத்திரைப்படத்தை டிரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கின்றார். இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். “ஜப்பான்” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளை சம்பவத்தை குறித்து தமிழக மக்கள் அறிந்த ஒன்றே. அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பான கொள்ளை சம்பவமாக இச்சம்பவம் பார்க்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூர் முருகன் என்ற கொள்ளையனின் கீழ் உள்ள கும்பல் ஈடுபட்டதாக போலீசார் கண்டுபிடித்தனர்.
அதன் பின் திருவாரூர் முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் மேல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் உள்ளதாக அதன் பின் தெரிய வந்தது. மேலும் திருவாரூர் முருகன் சொந்தமாக சினிமா எடுப்பதற்காகத்தான் கொள்ளையடித்தார் என்றும் தெரிய வந்தது.

திருவாரூர் முருகன் ஏற்கனவே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே திருவாரூர் முருகன் காலமானார்.
இந்த நிலையில் திருவாரூர் முருகனின் கதையை தழுவிதான் “ஜப்பான்” திரைப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. “ஜப்பான்” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது. அதில் கார்த்தி மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது திருவாரூர் முருகனின் கதை “ஜப்பான்” திரைப்படமாக உருவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.





