நடிகர் ஜெயம் ரவி, அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் என்ற படத்தில், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜெயம் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றதால், ஜெயம் ரவி என்ற பெயரே நிலைத்துவிட்டது. நிழல்கள் ரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி போல, முதல் படத்தின் பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டது. அதுவும் நல்ல ராசியாக தான் அவருக்கு முதலில் இருந்தது.
அதன்பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தனி ஒருவன், போகன், அடங்க மறு, நிமிர்ந்து நில், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வனமகன், தீபாவளி, பொன்னியின் செல்வன் என தொடர்ந்து பல படங்களில் நடித்த ஜெயம் ரவிக்கு, கடந்த சில ஆண்டுகளாகவே அவரது படங்கள் பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு தந்து வருகின்றன.
குறிப்பாக மிருதன், அகிலன், இறைவன், சமீபத்தில் வெளியான சைரன் வரை பல படங்கள் ஜெயம் ரவிக்கு பலத்த தோல்வியை தந்த படங்களாக மாறிவிட்டன. இப்போது உதயநிதி ஸ்டாலின் மனைவி இயக்கத்தில், காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நித்யா மேனனுடன் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்த படத்தின் வெற்றியை ஜெயம் ரவி மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறார். ஆனால் இது ஹீரோயின் ஓரியண்ட் படம் என்றும் தகவல் அடிபடுகிறது.
இதுதவிர பிரதர், சீனி, தக்லைப் போன்ற படங்களிலும் நடித்துவரும் ஜெயம் ரவி, இந்த படங்களும் தனக்கு பழையபடி வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்த்து இருக்கிறார். அதே நேரத்தில் பல ஆண்டுகளாக தனி ஒருவன் 2 படத்தை எடுக்க ஜெயம் ரவி அண்ணன் மோகன் ராஜா அதிக ஆர்வமாக இருக்கிறார். ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தராமல் மற்ற படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் ஜெயம் ரவி. தனி ஒருவன் படம் மிகப்பெரிய ஹிட் படம் என்பது கவனிக்கத்தக்கது.
வருகிற ஏப்ரல் 19ம் தேதி, இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் வேண்டுகோள் ஒன்றை பதிவு செய்துள்ள நடிகர் ஜெயம் ரவி, வருகிற மக்களை தேர்தலில் நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களும், முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஓட்டுப் போட வேண்டும். நீங்கள் சரியான வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
திடீரென நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட இந்த பதிவுக்கு நிறைய லைக்குகள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் கமல், விஜயகாந்த், விஜய் வரிசையில் ஜெயம் ரவிக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதா, தொடர்ந்து தோல்வி படங்களாக இருப்பதால், ஏதேனும் ஒரு கட்சிக்கு தாவி விடலாமா, என்ற முடிவுக்கு எதிர்காலத்தில் வந்துவிடுவாரோ என, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.





