- Advertisement -
Homeபொழுதுபோக்குதயவு செஞ்சு எங்க உள்ளத்தை சிதைக்காதீங்க… அந்த தவறை செய்யாதீங்க… - உருக்கமாக வேண்டுகோள் விடுத்த...

தயவு செஞ்சு எங்க உள்ளத்தை சிதைக்காதீங்க… அந்த தவறை செய்யாதீங்க… – உருக்கமாக வேண்டுகோள் விடுத்த நடிகர் சூரி!

- Advertisement -

இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி சுவாசிகா ராஜ்கிரண் பாலசரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் மாமன் படம் கடந்த 16ம் தேதி வெளியானது. ரசிகர்களின் அமோக ஆதரவை வரவேற்பை பெற்ற இந்த படம் கடந்த 7 நாட்களில் 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. அதே நேரத்தில் மாமன் படம் இணையத்தில் வெளியாகி உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் சூரி கூறியிருப்பதாவது, ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது பலரின் கனவுகளும் உயிரோட்டமான உழைப்பும் சேர்ந்த ஒன்று. இந்த உரை என் திரைப்படத்திற்காக மட்டுமல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் பணி தியாகம் நம்பிக்கை மற்றும் அக்கறை உள்ளிட்டவை இருக்கின்றன.

ஒரு படம் உருவாகிறது என்றால் அது ஒரு குழந்தை பிறப்பதை போல. கதையிலிருந்து தொடங்கி படப்பிடிப்பு பின்னணி வேலை தொகுப்பு இசை விளம்பரங்கள் என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்து மாறாத உறுதியுடன் கட்டி எழுப்பப்படுகிறது. ஒரு படம் வென்றாலும் தோற்றாலும் அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள் மகிழ்ச்சிகள் நம்பிக்கைகள் அனைத்தும் கலந்து இருக்கின்றன.

இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகு சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து படத்தை பார்த்துவிட்டு அதை பெருமையாக பகிரும் போது அது நம் உள்ளத்தை சிதைக்கிறது. அந்த ஒரு வியூக்காக யாரோ ஒருவரின் வருடங்கள் கொண்ட உழைப்பை கலைத்து விடுகிறோம். திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல. சில நேரங்களில் சமூகத்தில் முக்கியமான கருத்துகளை எடுத்துரைக்கும் வழிமுறையாகவும் உருவாகின்றன.

சில படம் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. இத்தனை தன்னலம் இல்லாத உழைப்பை மதிக்காமல் திருட்டு பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல, மனிதநேயத்தையும் கைவிடும் ஒரு செயலாகவே உள்ளது. எனவே என் பணிவான வேண்டுகோள் என்னவென்றால், புதிய படங்களை திருட்டு பதிவிறக்கம் செய்யாதீர்கள்.

திரைப்படங்களை சரியான வழியில் பார்த்து அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது. நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால் திரையுலகம் இன்னும் உயரலாம் என்று அந்த பதிவில் நடிகர் சூரி கூறியிருக்கிறார்.

சற்று முன்