தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. அவர் நேற்று ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார். அதில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அவர் அறிவித்தது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சில மாதங்களாக அவர்களுக்குள் விரிசல் இருப்பதாக பரவிய தகவலை உறுதிப்படுத்தியது.
கடந்த 2009ம் ஆண்டில் ஜெயம் ரவி, ஆர்த்தி திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காதல் வசப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக காதலித்து பிறகுதான் திருமணம் செய்து கொண்டனர். 2009ம் ஆண்டில் இரு தரப்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடந்தது. கடந்த 15 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இதில் ஒரு மகன், நடிகர் ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். ஜெயம் ரவி நடித்த சில படங்களை, ஆர்த்தியின் அம்மா, அதாவது ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். இந்த சூழ்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஒரு முக்கியமான அறிவிப்பை நேற்று வெளியிட்டது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த அறிக்கையில், நீண்ட கால யோசனை, பல பரிசீலனைக்கு பின் ஆர்த்தியை பிரியலாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். இது எளிதாக எடுக்கப்பட்டது அல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருதி எடுக்கப்பட்டது. இது எனது சொந்த முடிவு என்பதால் எனது தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டுகிறேன். அனைவரது ஆதரவுக்கும் நன்றி என அந்த அறிக்கையில் ஜெயம் ரவி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது 44ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். நேற்று மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருந்த ஜெயம் ரவி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த 2009 ஆம் ஆண்டில் ஆர்த்தியை திருமணம் செய்ததை ரத்து செய்யக் கோரியும், இருவருக்கும் விவாகரத்து வழங்க கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு வருகிற அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது ஜெயம் ரவி இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், பிறந்தநாளில் இப்படி ஒரு கடுமையான முடிவை எடுத்தது மட்டும் இன்றி, பிறந்தநாள் அன்று தனது மனைவியை பிரிய விவாகரத்து கேட்டு கோர்ட்டில் அவர் வழக்கு தாக்கல் செய்திருப்பது பலருக்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





