தமிழ் சினிமாவில் தான் அறிமுகமானதுமுதல் குறிப்பிடத்தக்க வெற்றிகளை கொடுத்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. தனது அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் ஜெயம் படத்தில் அறிமுகமான அவர், அந்த படத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் தனது பெயரை ஜெயம் ரவி என்று சேர்த்துக் கொண்டார்.
தொடர்ந்து எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என தொடர் வெற்றிகளை, மோகன் ராஜா மூலம் கொடுத்தார். பேராண்மை போன்ற திரைப்படங்களும் ஜெயம் ரவியின் திரையுலக வளர்ச்சி காரணமாக இருந்தது எனக் கூறலாம். இப்படி இருக்க அவரது மார்க்கெட் இரு மடங்காக தூக்கிய திரைப்படம் தனி ஒருவன்.
2015ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற, தற்போது அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் ஏராளமான திரைப்படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார். சைரன், பிரதர், ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படம், மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் ஒரு படம் என ஜெயம் ரவியின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இதில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படம், வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய அகமது இந்த படத்தை எடுத்துள்ளார். நயன்தாரா இதில் நாயகியாக நடித்திருக்கிறார். விஸ்வரூபம் படத்தில் மிரட்டிய ராகுல், இதில் வில்லனாக நடித்துள்ளார். சைக்கோ கிரைம் த்ரில்லர் திரைப்படமாக இறைவன் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இதன் டிரைலர் பலரிடம் வரவேற்பைப் பெற்றது.
இதன் ப்ரீ ஈவென்ட், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் இறைவன் படக்குழுவினருடன், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் ஹெச் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, எனக்கு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அப்படி நான் இயக்கம் செய்தால் அது நிச்சயம் விஜய் சேதுபதிதான் என்று கூறியிருந்தார்.
இறைவன் படத்தில் தணிக்கைக் குழு ஏ சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இது குறித்து பேசிய அவர், நான் எப்போது ஆடியன்ஸ்களுக்காகதான் நடிப்பேன். ஆனால் இறைவன் அப்படி அல்ல. இதனை குழந்தைகள் பார்க்க நான் பரிந்துரைக்க மாட்டேன். நாங்கள் இந்த படத்தில் எதனையும் மறைக்க விரும்பவில்லை. அதனால் தெளிவாக டிரைலரிலேயே அப்படி காட்சி படுத்தியிருந்தோம். இந்த படத்தை நீங்கள் விரும்புவீர்கள் என நம்புகிறேன். குடும்பத்தினருக்காக பிரதர் போன்ற நிறைய படங்களில் நடித்து வருகிறேன் என்று தெரிவித்தார்.





