இலக்கியத்தில் மிகச்சிறந்த பங்களிப்பை தரும் எழுத்தாளர்களுக்கு மத்திய அரசு சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் வழங்கி கௌரவித்து வருகிறது. அதே போல் இலக்கியத்தில் இந்தியாவில் மிக உயரிய விருதாக ஞானபீடம் விருது கருதப்படுகிறது. எழுத்தாளர் தன் வாழ்நாளில் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஞானபீட வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிகப் பழமையான இலக்கிய விருதுகளில் இது ஒன்றாகும். டைம்ஸ் ஆஃப் இந்தியா குடும்பத்தைச் சேர்ந்த சாகு ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்ட பாரதிய ஞான பீடம் அறக்கட்டளை தான் இந்த விருதுகளை வழங்கி வருகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
எழுத்தாளர் அகிலனின் சித்திரப்பாவை படைப்புக்கு 1975ம் ஆண்டில் ஞானபீட விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு 2002ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் இலக்கியத்துக்கு ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. எண்ணற்ற தகுதி வாய்ந்த எழுத்தாளர்கள் இருக்கும்போதிலும் 1965ம் ஆண்டு முதல் இதுவரை 2 தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமே ஞானபீட விருதை பெற்றுள்ளனர்.
தற்போது உருது சமஸ்கிருத எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்ட நிலையில் உலகின் மிகப் பழமையான மொழியான தமிழில் எழுத்தாளர் ஒருவருக்கு கூட கடந்த 24 ஆண்டுகளாக ஞானபீட விருது வழங்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில் கவிப்பேரரசு என அழைக்கப்படும் தமிழ் கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீடம் விருது பெறும் 3வது தமிழர் என்ற பெருமையையும் வைரமுத்து பெறுகிறார்.
கவிஞர் வைரமுத்து இதற்கு முன்பு பத்ம பூஷண் பத்ம ஸ்ரீ சாகித்ய அகாடமி கலைமாமணி விருது பாவேந்தர் விருது பாரதிய இலக்கிய பரிசு போன்ற பல விருதுகளையும் 7 முறை சிறந்த கவிஞர் என்ற மத்திய அரசின் தேசிய விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு நடிகர் மற்றும் ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
அதில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, நெடிய பரம்பரை கொண்ட தமிழ் இலக்கியத்துக்கு 3வது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞான பீடத்திற்கு பிறகு கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்த பெருமையை சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு வைரமுத்து. வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கது சேதி தரும் என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன் என்று தனது எக்ஸ் பதிவில் கமல்ஹாசன் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.





