ஜோஷி இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் பொரிஞ்சு மரியம் ஜோஸ். ஜோஜு ஜார்ஜ் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் காரணமாக ஜோஷி – ஜோஜு ஜார்ஜ் கூட்டணி மீது எதிர்பார்ப்பு மலையாள திரையுலகில் அதிகரித்தது. இந்த சூழலில் மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி தற்போது இணைந்திருக்கிறது.
அதன்படி ஜோஷி இயக்கியிருக்கும் ஆண்டனி படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்திருக்கிறார். ஜார்ஜுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், ஆஷா சரத், செம்பன் வினோத் , நைலா உஷா, ஜினு ஜோசப், ஹரிபிரசாந்த், அப்பானி சரத், உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ராஜேஷ் வர்மா இந்தப் படத்துக்கு வசனம் எழுத ரெனதீவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை ஷ்யாம் சசிதரனும் ஆர்.ஜே.ஷானும் கவனிக்கின்றனர்.
‘ஆண்டனி’ படத்தை ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் மலையாளம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ஃபார்ஸ் பிலிம்கோ மோஷன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் முதன்முறையாக வெளியாகப்போகும் பான் இந்தியா படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷனின் கதாபாத்திரம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் மலையாளம் மற்றும் தமிழில் நடித்திருந்தாலும் இதுவரை அழுத்தமான எந்த கதாபாத்திரமும் கிடைக்கவில்லை. சமீபத்தில் இதுகுறித்து பேசியபோதுகூட, ஜோஷியுடன் இணைந்து பணியாற்றுவது மேஜிக் போல் இருக்கிறது. சந்தோஷமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கையில் படம் பக்கா ஆக்ஷன் பேக்கேஜோடு உருவாகியிருக்கிறது என்பது உறுதியாகிறது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகரனின் அட்டகாசமான ஆக்ஷன் கோரியோகிராஃபி பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் இதுவரை சாந்தமாக தோன்றிக்கொண்டிருந்த கல்யாண் ப்ரியதர்ஷன் இதில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
பல சண்டை காட்சிகளில் நடித்திருக்கும் அவர் ட்ரெய்லரில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். தற்போது இந்த ட்ரெய்லரை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடுகின்றனர். படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.





