“ஜெயிலர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் கூறிய காகா கதை இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. “வாரிசு” திரைப்படம் வெளியான சமயத்தில் இருந்தே விஜய் ரசிகர்கள் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த விவகாரத்தை குறித்துதான் ரஜினி, விஜய்யை குறித்து மறைமுகமாக பேசியதாக பலரும் கூறி வருகின்றனர்.

அதே போல் அந்த விழாவில் கலந்துகொண்ட “ஜெயிலர்” படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன், மேடையில் பேசியபோது, விஜய்யை டைரக்டாகவே தாக்கியது போல் இருந்தது. ஆதலால் “ஜெயிலர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த சமயத்தில் சமூக வலைத்தளங்களில் பலரும் ரஜினிகாந்த், கலாநிதி மாறன் ஆகியோர் பேசியது குறித்தே வைரல் ஆக்கி வந்தனர். இந்த நிலையில்தான் அதற்கு அடுத்த நாளே “லியோ” திரைப்படத்தின் சஞ்சய் தத் கதாபாத்திரம் குறித்தான கிளிம்ப்ஸ் ஒன்று வெளிவந்தது.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், இந்த விவகாரம் குறித்து பேசியபோது, “ஜெயிலர் கொண்டாட்டம் தொடங்கி ஒரு நாள் கூட முடிவடையவில்லை. அதற்குள் லியோ கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட வேண்டுமா என்றுதான் எனக்கு தோன்றியது. மக்கள் பார்வையை உடனே திருப்பிவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை செய்கிறார்களோ என சந்தேகம் எழுகிறது” என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “ஜெயிலர் திரைப்படத்தை பற்றி பேசத்தொடங்கியவுடன் லியோ கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு விட்டார்கள். உடனே மக்கள் லியோ குறித்து பேசத் தொடங்கிவிட்டனர். இந்த சூப்பர் ஸ்டார் பிரச்சனை விஜய் மனசு வைத்தால் முடியும். லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி பட்டமே தனக்கு போதும், சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று விஜய் கூறினாலே இந்த பஞ்சாயத்து முடிந்துவிடும்” என்று அந்தணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.





