இயக்குநர் இமயம் என்று புகழப்படும் பாரதிராஜா இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்களையும், ஹீரோயின்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அப்படி அவர் அறிமுகப்படுத்திய ஹீரோதான் பாபு. கடந்த 1990ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான என் உயிர்த் தோழன் படத்தின் மூலம் பாபு ஹீரோவாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தேர்ந்த நடிகனுக்குரிய முக பாவனைகள், உடல் மொழி உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தி பெயர் வாங்கினார். அதன் பிறகு அவர் தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்தார். ஐந்தாவது மனசார வாழ்த்துங்களேன் என்ற படத்தில் நடித்தார். அப்போது ஒரு ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது ரிஸ்க் எடுத்து உயமான இடத்திலிருந்து குதித்ததில் அவரது முதுகு எலும்பு உடைந்துபோனது. இதனால் கடந்த 30 வருடங்களாக படுத்த படுக்கையாகவே இருந்தார்.
இந்த சூழலில் நேற்று அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த பாரதிராஜா, “திரைத்துறையில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்திருக்க வேண்டியவர். படப்பிடிப்பில் நடந்த விபத்தால் 30 வருடங்களாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த என் உயிர் தோழன் பாபுவின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்” என கூறியிருந்தார்.
இந்நிலையி சினிமாவில் மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு பாபு குறித்து பேசுகையில், “30 ஆண்டுகளாக பாபு படுத்த படுக்கையாகி அந்தப் படுக்கையிலேயே சிறுநீர் கழித்து நரக வாழ்க்கை வாழ்ந்து உயிரிழந்திருக்கிறார். மனதார வாழ்த்துங்களே சண்டைக் காட்சியில் குதிக்கும் சீனில் டூப் போடாமல் குதித்தார்.அப்போது மெத்தையில் விழாமல் தரையில் விழுந்துவிட்டார். இதனால் முதுகுத்தண்டு நொறுங்கிவிட்டது. ஒரு நொடியில் அவரது வாழ்க்கை மாறிவிட்டது.
அதனையடுத்து பாரதிராஜா, பொன்வண்ணன் உதவி செய்து எழுந்து நிற்கக்கூடிய அளவுக்கு குணமானார் பாபு. இப்படிப்பட்ட நேரத்தில்தான் வேறு சிகிச்சை எடுத்தார். ஆனால் அந்த சிகிச்சை தவறாகிவிட நிரந்தரமாக படுத்த படுக்கையாகிவிட்டார் பாபு. வாழ்க்கயில் பிரச்னை வந்தால் மொத்தமாக வரும் என்று சொல்வார்கள். அப்படித்தான் பாபுவுக்கும்.
இந்தப் பிரச்னை ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் வங்கி மேலாளரான பாபுவின் தந்தை சம்பாதித்த மொத்த பணத்தை சிட் ஃபண்டில் போட அதை ஒருவன் சுருட்டிவிட்டான். பிறகு கீழ்ப்பாக்கத்தில் மாளிகை வீட்டில் இருந்தவர்கள் வாடகை வீட்டுக்கு போக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்” என்றார்.





