உனக்கு வில்லன் யாருமில்லை, உன்னுடைய நாக்குதான் உனக்கு முதல் எதிரி என்று ஒரு தத்துவம் சொல்வதுண்டு. பலர் நல்ல மனிதர்களாக இருந்தாலும், தேவையில்லாத இடங்களில் தேவையில்லாத விஷயங்களை பேசி, வம்பில் மாட்டிக் கொள்வார்கள். சிலர் பேசும் விஷயங்களே பெரிய சர்ச்சையாகி, அவர்கள் விவகாரங்களில் சிக்கிக்கொள்வதும் உண்டு.
அதுவும் சினிமா நட்சத்திரங்களாக இருக்கும் பட்சத்தில் பொது இடங்களில், பேச்சிலும், செயல்களிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஏதேனும் தவறாகி பேசி விட்டால், தவறாக நடந்துக்கொண்டால் அவர்களது இமேஜ் டேமேஜ் ஆகி விடும். ஆனால் இந்த அட்வைஸ் எல்லாம் மீறி பேசும் சில நடிகர், நடிகைகள் எப்போதுமே இருக்கவே செய்கின்றனர். அதில் மிக முக்கியமானவர் நடிகர் விஷால்.
நடிகர் விஷால், நடிப்பது மட்டுமின்றி விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்கவும் செய்கிறார். சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21.29 கோடி ரூபாய் கடனாக விஷால் வாங்கியிருந்தார். கடனை விஷால் திருப்பி தராத நிலையில், அவரது சார்பில் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் செலுத்தியது. அந்த தொகையை விஷால் திருப்பி தரும் வரை, விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை, லைகா நிறுவனத்துக்கு வழங்கவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி, நடிகர் விஷால் அவரது தயாரிப்பில் உருவான வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட்டதாக கூறி, லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து, விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜரான நடிகர் விஷால், இந்த ஒப்பந்தம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வெற்றுதாள்களில் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள், என்று தெரிவித்தார்.
இதை குறுக்கிட்டு கேள்வி கேட்ட நீதிபதி, புத்திசாலித்தனமாக பதில் அளிப்பதாக நினைக்கறீர்களா, உங்கள் கையெழுத்துதானே, நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும், இது ஒன்றும் சினிமா படப்பிடிப்பு அல்ல, கவனமாக பதில் அளியுங்கள் என்று கூறினார். மேலும் சண்டக்கோழி 2 படம் வெளியாவதற்கு முன்பே பணம் தந்துவிடுவதாக கூறினீர்களே என்று நீதிபதி கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த விஷால், பாஸ் என்று நீதிபதியை அழைத்துள்ளார்.
இப்படி பாஸ் என்றெல்லாம் அழைக்க கூடாது. கேட்கிற கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று சரியான பதிலை சொல்லுங்கள் என்று நீதிபதி கண்டித்துள்ளார். தொடர்ந்து 2 நாட்கள் கோர்ட் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜரான நடிகர் விஷால், 150 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.





