இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற புகழப்படும் பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் கே பாக்யராஜ். ஆனால் திரைக்கதை, இயக்கத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் கே பாக்யராஜ் அசத்தக் கூடியவர். அவரது இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருந்தவர். பாரதிராஜாவிடம் பாடம் கற்ற உதவி இயக்குனர் கே பாக்யராஜ். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் எனது கலைவாரிசு என்று சொன்னது கே பாக்யராஜைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1980, 90களில் அவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன. யதார்த்தமான அவரது காமெடி கலந்த படங்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், சுவரில்லாத சித்திரங்கள், இன்றுபோய் நாளை வா, தாவணிக் கனவுகள், எங்க சின்ன ராசா, ராசுக்குட்டி, ஞானப்பழம், அவசர போலீஸ் 100 என பல ஹிட் படங்களை தந்தவர்.
இப்போதும் இயக்குனர் கே பாக்யராஜ் படங்களில் நடித்து வருகிறார். திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். இவரது மகன் சாந்தனுவும் தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து புதிய படங்கள் விழாவில் மூத்த இயக்குனர், நடிகர் என்ற முறையில் கே பாக்யராஜ் கலந்துக்கொண்டு பிரமோசன் தருவது வழக்கமாக கொண்டிருக்கிறார்.
3 எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் சிவா எழுதி இயக்கி தயாரித்திருக்கும் ஆலன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு நடந்தது. இந்த நிகழ்வில் கே பாக்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது. சிறிய முதலீட்டு திரைப்படங்களை திரையரங்கிற்கு கொண்டு வருவதில் பெரு முயற்சி செய்வது வரவேற்கத்தக்கது. நடிகர் வெற்றி எப்போதும் வித்தியாசமான படங்களையே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அதற்காக வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் வாழ்க்கையை பார்ப்பதும், புத்தகங்களை படிப்பதும் ஒன்றுதான். ஏனெனில் ஒருவன் தன் வாழ்க்கையில் ஏராளமான அனுபவங்களை சந்தித்திருக்க முடியாது. ஆனால் புத்தகங்களை படிக்கும் போதுதான் அந்த கதாசிரியர் அவருடைய வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களை கதாபாத்திரங்களாக உருவாக்கி இருப்பார்.
நான் என் வாழ்க்கையில் காண்டேகர் கதைகள், ஜெயகாந்தன் கதைகள், கல்கியின் கதைகள் ஆகியற்றை படித்திருக்கிறேன். இதுபோன்ற ஏராளமான புத்தகங்களை படிக்கும் போது புதிய, புதிய கதாபாத்திரங்கள் கிடைக்கும். இதன்மூலமே கதைகளை எடுக்க முடியும். கடைசிவரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த படத்தின் மூலம் மக்களுக்கு அன்பின் வலிமை புரிய வேண்டும் என இயக்குனர் சிவா விரும்பி இருக்கிறார். தூய்மையான ஆன்மிகம் என்பது அன்பு என்பதையும் சொல்லி இருக்கிறார். ஆலன் படம் பெரிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன் என்று நடிகர் கே பாக்யராஜ் இந்த விழாவில் பேசியிருக்கிறார்.





