தமிழ் சினிமாவில் சில நடிகைகள் இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகின்றனர். அதே போல் நடிகர்களில் சிலரும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம், சினிமா நட்சத்திரங்களிடையே அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள்தான்.
காதல் திருமணம் செய்து 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்களே விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு செல்வது நாளுக்கு நாள் சினிமா உலகில் அதிகரித்து வருகிறது. இதற்கும் வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் சினிமா நட்சத்திர தம்பதிகள் கூட விவாகரத்து கேட்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற நேரத்தில் சினிமா நடிகர், நடிகைகள் திருமண அறிவிப்புகள் ரசிகர்களை சந்தோஷப்படுத்தவே செய்கின்றன. நடிகர் விஷால், சாய் தன்ஷிகா திருமண அறிவிப்பு கூட ரசிகர்கள் மத்தியில் பெரிய சந்தோஷ அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்ததாக சிம்பு திருமணம் எப்போது, அதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்றுதான் சிம்பு ரசிகர்கள் காத்திரக்கின்றனர்.
இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ், கபாலி மற்றும் பாலா இயக்கிய பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரித்விகா. பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் ரித்விகா நடித்திருக்கிறார். குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் ரித்விகாவின் கேரக்டர் ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்றது. இதற்கிடையே விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று ரித்விகா டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடிகை ரித்விகா தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி படங்களில் நடித்து வருகிறார். கடந்த மாதம் வினோத் லட்சுமணன் என்பவருக்கும் ரித்விகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இது காதல் திருமணம் அல்ல. இரு தரப்பிலும் பெற்றோர் பார்த்து முடிவு செய்த திருமணம்தான். வருகிற 27ம் தேதி வினோத் லட்சுமணன் ரித்விகா திருமணம் சென்னையில் நடப்பதாக இருந்தது. இதற்காக திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் அழைப்பிதழ் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் திடீரென தனது திருமணம் தள்ளி வைக்கப்படுவதாக நடிகை ரித்விகா தனது வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். திருமணத்தை தள்ளி வைப்பதற்கான காரணம் என்ன என்று அவர் அதில் கூறவில்லை. மேலும் எப்போது திருமணம் நடக்கும் என்ற தகவலும் அதில் இல்லை. இது ரசிகர்கள் மத்தியில் பலத்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சில தினங்களில் இதற்கான காரணத்தை நடிகை ரித்விகா வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.





