தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டாலும் உண்மையில் நெருங்கிய நண்பர்களாக அன்று முதல் இன்று வரை இருந்து வருபவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். அவர்களுக்குள் எப்போதுமே ஒரு சகோதர பாசமும் நெருக்கமான நட்பும் இருந்து வருகிறது. இப்போது வரை அந்த அன்பும், நட்பும் இருவருக்கும் தொடர்கிறது.
கடந்த 1975ம் ஆண்டில் கே பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் ரஜினி அறிமுகமான போது, அந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தவர் கமல். எனினும் ரஜினியிடம் புதுமுக நடிகர் என்ற பாரபட்சம் பார்க்காமல் நெருக்கமான நட்பை காட்டியவர் கமல்.
அதன்பிறகு இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்தனர். அந்த படங்கள் பெரிய வெற்றி பெற்றாலும் அவர்களின் வருமானம் உயரவில்லை. பிறகு, தனித்தனியாக நடித்தால்தான் இருவரும் சினிமாவில் உயர முடியும், அதிக சம்பளம் வாங்க முடியும் என்று ஆலோசித்து தனித்தனி பாதையில் இருவரும் வெற்றி நடை போட்டனர்.
இந்நிலையில் ஹே ராம் படத்தின் தோல்விக்கு பிறகு, கமல் படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. அப்போது இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம், நீங்களே என்னை வைத்து இயக்கி ஒரு படம் தயாரியுங்கள் என்று கமல் கூறியிருக்கிறார். அதுபற்றி ரஜினியிடம் கேஎஸ் ரவிக்குமார் கூறிய போது, கமலுக்கு உடனே அட்வான்ஸ் கொடுங்கள் என்று நம்பிக்கையாக பேசியிருக்கிறார்.
நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறுகையில், தெனாலி படம் மூலமாகதான் நான் தயாரிப்பாளரானேன். அந்த நம்பிக்கையை கொடுத்தது கமலும் ரஜினியும்தான். தெனாலி படத்தின் கதையை முதலில் ரஜினியிடம்தான் கூறினேன். கதையை கேட்ட அவர், ஹீரோ கோமாளியாக இருந்தாலும் பெரிய அறிவாளி. அப்படிப்பட்டவர் தெனாலி ராமன். அதனால் கமல் நடிக்கும் இந்த படத்துக்கு தெனாலி என பெயர் வையுங்கள். மிக பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.
கமலிடம் இந்த தெனாலி டைட்டிலை சொல்லுங்க, அவருக்கு பிடித்தால் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் நான் சொன்னதாக கமலிடம் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். கமலுக்கு அந்த தெனாலி டைட்டில் பிடித்ததால், அதையே படத்துக்கு வைத்துவிட்டோம். படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழா மேடையில்தான் இது ரஜினி சொன்ன டைட்டில் என்ற விஷயத்தையே நான் பகிரங்கமாக சொன்னேன். அதுவரை கமலுக்கு இந்த விஷயம் தெரியாது, என்று கேஎஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.





