விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டில் பிக்பாஸ் என்ற ரியாலிடி ஷோ துவங்கப்பட்டது. 20 பேர் வரை, பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாட்களுக்கு மேல் தங்கி, அங்கு நடத்தப்படும் டாஸ்க்களில் பங்குபெற வேண்டும். இதில் வெற்றி பெறுவோர், மக்கள் ஆதரவு பெறுவோர் பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாட்கள் வரை இருந்து வெற்றி வாய்ப்பை பெறலாம். அல்லது வாரந்தோறும் ரசிகர்களின் அளிக்கும் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் வெளியேற்றப்படலாம்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன்தான் கடந்த 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வந்தார். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கமல், அந்த வாரம் வீட்டுக்குள் நடந்த பிரச்னைகள், போட்டிகள் குறித்து பேசுவார். பிறகு, மக்கள் ஓட்டு போட்ட அடிப்படையில் தோல்வியடைந்த போட்டியாளரை வீட்டை விட்டு வெளியேற்றுவார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை, கமல் அந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தார். அந்த நிகழ்ச்சியை அவர் சுவாரசியமாக நடத்தினார். மேலும், வாரந்தோறும் ஞாயிறு நிகழ்ச்சியில், புத்தக பரிந்துரை என்ற பெயரில், நல்ல நூல்களை மக்களுக்கு அறிமுகம் செய்து பேசினார். கொரோனா பாதித்த போது மட்டும் 2 வாரங்கள், கமலுக்கு பதிலாக ரம்யாகிருஷ்ணன் நிகழ்ச்சியை நடத்தினார்.
மேலும், 24 மணி நேரம் அல்டிமேட் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் நடத்தினார். அதற்கு காரணம் நடிகர் கமல் அப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படப்பிடிப்பில் இருந்ததால், கமலுக்கு பதிலாக அந்த அல்டிமேட் பிக்பாஸ் நிகழ்ச்சியை சிலம்பரசன் நடத்தினார். இந்த சூழலில் விரைவில் பிக்பாஸ் சீசன் 8 துவங்கப்பட ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே படங்களில் நடிக்க ஒத்துக்கொண்ட காரணங்களால், என்னால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடியவில்லை. அதனால் கனத்த இதயத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் முடிவை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை மக்கள் அளித்த ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் இந்த முடிவால், விஜய் டிவி நிர்வாகம் அடுத்த தொகுப்பாளரை உடனடியாக தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் சிலம்பரசனே இந்த நிகழ்ச்சியை நடத்த வருவாரா, அல்லது வேறு பிரபல நடிகர்களை அழைக்க வாய்ப்புள்ளதா குறிப்பாக கோடீஸ்வரன் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய சூர்யா, அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், சரத்குமார் போன்றவர்களை அழைப்பார்களா, என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.





