தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு முக்கிய நடிகராக தனுஷ் இருக்கிறார். ஆரம்பத்தில் ஒல்லிப்பிச்சான் நடிகர் என்ற உருவக்கேலிக்கு ஆளான அவர் இன்று நடிகர் பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக தன்மை கொண்டவராக சினிமாவில் ஜெயித்துக் காட்டி இருக்கிறார். தவிர்க்க முடியாத ஒரு கலைஞராக தன் திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்தாண்டில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ரூ. 13 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ. 8 கோடி வசூலை மட்டுமே கடந்த நிலையில் ஏமாற்றத்தை தந்துவிட்டது.
தமிழ் சினிமாவுக்கு நடிகர் தனுஷை ஒரு நடிகராக தந்தவர் அவரது அண்ணன் இயக்குனர் செல்வராகவன் என்றால் அது மிகையல்ல. அவர் இயக்கிய காதல் கொண்டேன் புதுப்பேட்டை போன்ற படங்கள் தனுஷூக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தந்தன. நானே வருவேன் படத்திலும் இரட்டை வேடத்தில் தனுஷ் நல்ல நடிப்பை தந்திருந்தார்.
தனுஷ் நடித்த படங்களில் அவருக்கு பெரிய நடிகர் என்ற ஒரு வரவேற்பை பெற்றுத் தந்த படங்கள் என்றால் அது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய படங்கள்தான். பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் வடசென்னை ஆகிய வெற்றிமாறன் படங்களில் நடித்த போது தனுஷ் இன்னும் மிக சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
அந்த வகையில் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான முதல் படம் பொல்லாதவன். கடந்த 2007ம் ஆண்டில் வந்த இந்த படத்தில் திவ்யா ஸ்பந்தனா கிஷோர் டேனியல் பாலாஜி சந்தானம் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். பைக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது.
இப்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு பொல்லாதவன் படத்தை ரி ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே தனுஷ் நடித்த 3 மயக்கம் என்ன புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்போது பொல்லாதவன் படமும் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





