தமிழ் சினிமாவை பொருத்த வரை, அன்றும் சரி இன்றும் சரி… கதை திரைக்கதை நன்றாக இருந்தால் படம் பிச்சிக்கிட்டு ஓடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அன்று சம்சாரம் அது மின்சாரம் கரகாட்டக்காரன் என் ராசாவின் மனசிலே போன்ற படங்கள் ஓடியது போல இன்று பார்க்கிங் லப்பர் பந்து குட்நைட் டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் ஓடுகின்றன என்றால், அது மக்களை ரசிக்க வைத்த யதார்த்த படங்களாக இருந்ததுதான்.
நல்ல கதையும் திரைக்கதையும் இருந்தால் அங்கு நடிகர்கள் நடிகைகள் முக்கியமல்ல. படமே அந்த வெற்றியை கொண்டு வந்து விடுகிறது. ஆனால் ஹீரோக்களுக்காக படம் செய்யும் இயக்குனர்களால் தமிழ் சினிமாவின் தரம் நாளுக்கு நாள் அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அவ்வப்போது பார்க்கிங் லப்பர் பந்து டூரிஸ்ட் பேமிலி போல சில நல்ல படங்கள் வந்து தமிழ் சினிமாவின் தரத்தை காப்பாற்றுகின்றன.
நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் என தமிழ் சினிமாவில் 2 ஜாம்பவான்கள் இணைந்துதான் தக்லைஃப் படத்தை உருவாக்கினார்கள். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் கமலுடன் சிலம்பரசன் திரிஷா அபிராமி அசோக் செல்வன் நாசர் ஜோஜூ ஜார்ஜ் என நட்சத்திர கலைஞர்கள்தான் நடித்திருந்தனர். ஆனால் படம் பிளாப் ஆகி விட்டது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் கமல் சொந்தமாக தயாரித்த இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை கூட எட்டவில்லை என்கின்றனர்.
இந்த சூழலில் நடிகர் கமல்ஹாசன் ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். அது இனிமேல் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க கூடாது. அதே போல் தானும் இனி பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பது இல்லை என்ற முடிவுக்கும் கமல்ஹாசன் வந்திருக்கிறார்.
அடுத்ததாக அன்பறிவ் மாஸ்டர்ஸ் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அவரது 237வது படமும் குறைந்த பட்ஜெட் படம்தான். 3 மாதங்களில் இந்த கமல் 237 படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். வீரதீர சூரன் 2 படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் பட்ஜெட்டும் மிக குறைவுதான் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் அரசியல்வாதி ஆகி விட்டதால், அவரை வைத்து படம் எடுக்க மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குகின்றன. அதனால் கமல் தனது சொந்த தயாரிப்பு படங்களில்தான் அதிகமாக நடிக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. அதுதான் இந்த முடிவுக்கு முக்கிய காரணம். அதே நேரத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் பெரிய வெற்றியை வசூலை கடந்தாண்டில் தந்தது. அதுபோன்ற முன்னணி கமர்ஷியல் ஹீரோக்களின் படங்களை தனது நிறுவனம் சார்பில் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க கமல் ஓகே சொல்கிறார். ஏனென்றால் அந்த படங்கள் வசூலை கொட்டுகிறது.





