இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கிய அவர் இதுவரை 232 படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களை இயக்கியிருக்கிறார். உதவி நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சினிமாவின் அத்தனை ஏரியாக்களிலும் கில்லி என்று பெயர் எடுத்தவர்.
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதுவாகவே மாறிவிடக்கூடிய தன்மை உடைய உன்னத கலைஞன் என்ற பெயரை பல வருடங்களாகவே தக்க வைத்திருக்கிறார் கமல். சினிமாவில் தீவிர கவனம் செலுத்திவந்த அவர் திடீரென அரசியல் களத்துக்கு சென்று தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் அவருக்கு அரசியல் சரியாக அமையவில்லை.
இதனையடுத்து மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்து வரிசையாக படங்களில் நடித்தும் படங்களை தயாரித்தும்வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2, ஹெச்.வினோத் இயக்கும் படம், மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. சமீபத்தில்தான் தக் லைஃப் படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி பாராட்டையும் விமர்சனத்தையும் பெற்றது.
இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்துவருகின்றன. இந்த சூழலில் அவர் நேற்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் முதல் திரையுலக பிரபலங்கள்வரை வாழ்த்து தெரிவித்தனர். கமல் ஹாசனும் பத்திரிகையாளர்கள், ரசிகர்களுக்கு பலமான விருந்தையும் வைத்தார்.
அந்த விருந்தை முடித்துவிட்டு திரையுலக பிரபலங்களுக்கு தனியார் நட்சத்திர ஹோட்டலில் மாபெரும் பார்ட்டி ஒன்றை கொடுத்தார். அதில் அமீர்கான், சூர்யா, குஷ்பூ, ஏவிஎம் சரவணன், ரம்யா கிருஷ்ணன், விஷ்ணு விஷால், லோகேஷ் கனகராஜ், ஜிவி பிரகாஷ், நரேன் என பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.
எத்தனையெத்தனை இதயங்கள்… அத்தனையும் நான் உறையும் இல்லங்கள். என் பிறந்த நாளில் என்னை வாழ்த்திய கலைஞர்கள், தலைவர்கள், நண்பர்கள், மய்ய உறவுகள், என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது. என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 8, 2023
இந்நிலையில் தனக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்திருக்கும் கமல் ஹாசன், “எத்தனையெத்தனை இதயங்கள்… அத்தனையும் நான் உறையும் இல்லங்கள். என் பிறந்த நாளில் என்னை வாழ்த்திய கலைஞர்கள், தலைவர்கள், நண்பர்கள், மய்ய உறவுகள், என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது. என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள்” என குறிப்பிட்டிருக்கிறார்.





