நடிகர் கமல்ஹாசன் கடைசியாக வெளியான படம் இந்தியன் 2 ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாமல் படுதோல்வி அடைந்தது. நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான இந்த படம் இவ்வளவு மோசமான ஒரு தோல்வியை தழுவும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் இந்தியன் 3 இந்த தோல்வியை மறக்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தின் பிரமோ பணிகளில் இயக்குனர் ஷங்கர் ஆர்வமாக இருந்து வருகிறார். வருகிற ஜனவரி 10ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. ஐதராபாத், அமெரிக்கா என இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர்.
அதே போல் இந்தியன் 2 படத்துக்கு பிறகு, மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து முடித்தார். இந்த படத்தில் சிம்புவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். திரிஷா, அபிராமி உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். வரும் 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி தக்லைப் படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கடந்த 2 மாதங்களாக அமெரிக்காவில் தங்கியுள்ளார். ஏஐ தொழில்நுட்பம் குறித்து 45 நாட்கள் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னைக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 3 படத்தை தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கும் தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே அமெரிக்காவுக்கு செல்லும் முன்பே இந்த படத்தில் நடிப்பது குறித்து கமல்ஹாசன் கமிட் ஆன நிலையில், இப்போது கமல் 237 படத்தின் இயக்குனர்கள் அன்பறிவை, அமெரிக்காவுக்கு கமல் வரவழைத்துள்ளார்.
முழுக்க முழுக்க ஆக்சன் களத்தில் உருவாகும் இந்த படத்தின் கதை விவாதம், படத்துக்கான ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் குறித்து கமல், அன்பறிவ் மாஸ்டர்கள் ஆகியோர் அமெரிக்காவில் ஆலோசனை நடத்தியுள்ளனர். சிகாகோவில் நடிகர் கமல், ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் ஆகியோர் கமல் 237 படம் குறித்து கதை விவாதம், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசித்த தகவல், அவர்களது புகைப்படங்களுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.





