விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள் சீசன் 2” நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே அறியப்பட்டவர் கவின். அதனை தொடர்ந்து “தாயுமானவன்”, “சரவணன் மீனாட்சி” போன்ற தொடர்களில் நடித்த கவின், “பிக்பாஸ் சீசன் 3” நிகழ்ச்சியில் கன்டெஸ்டென்டாக நுழைந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமாக ஆனார். குறிப்பாக இளம் பெண்களின் இதயங்களில் ஒரு கியூட் பாய் ஆக இடம்பிடித்தார்.

கவின் ஏற்கனவே “பீட்சா”, “இன்று நேற்று நாளை”, “சத்ரியன்”, ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் வந்து போனார். அதனை தொடர்ந்து “நட்புனா என்னன்னு தெரியுமா?” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அத்திரைப்படம் சரியாக போகவில்லை.
அதன் பின் கவின் கதாநாயகனாக நடித்த “லிஃப்ட்” திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. ஆனால் அதை எல்லாம் தாண்டி கவினுக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் “டாடா”. இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. பலரும் இத்திரைப்படத்தை பாராட்டியிருந்தனர். அதே போல் “டாடா” திரைப்படம் ஒரு வெற்றித் திரைப்படமாகவும் அமைந்தது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன், ஒரு சினிமா விழாவில் பேசியபோது, “கவின் தனது சம்பளத்தை 2 கோடியாக உயர்த்தியுள்ளார். இது ரொம்ப தவறான விஷயம். ஒரு படம் வெற்றியடைந்தால் அடுத்த படத்திற்கு ஏதோ கொஞ்சம் சம்பளத்தை ஏற்றிக்கொள்ளலாம். திடீரென 2 கோடி சம்பளம் ஏற்றுவதெல்லாம் சரியானது அல்ல” என்று நடிகர் கவினை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.





