தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும், என்ற காவிரி ஆணையத்தின் உத்தரவை மீறி, கர்நாடக அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இதற்காக அரசியல் தலைவர்கள் தரப்பில், பலத்த கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால், இண்டியா கூட்டணியில் இருந்தும் திமுக அரசு, கர்நாடகாவில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் இருந்து காவிரி நீரை பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
இதற்கிடையே சித்தா படத்தின் பிரமோசனுக்காக சென்ற நடிகர் சித்தார்த், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த போது, அங்கு வந்த கன்னட அமைப்பினர், சித்தார்த் பங்கேற்க நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்து அவரை வெளியேற்றினர். அதுவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, தமிழ் சினிமா சார்ந்த முக்கிய முன்னணி நடிகர்கள் யாரும் இதுகுறித்து குரல் எழுப்பாமல் இருந்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படும் தங்களது படத்துக்கான வருவாயை இழந்துவிடக் கூடாது என்பதுதான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், தமிழ் சினிமா நடிகர்கள் கர்நாடகாவுக்கு எதிராக குரல் கொடுத்தால், முதலில் சிக்கல் வருவது அவர்கள் நடித்த படங்கள் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டார்கள் என்பதுதான்.
இதற்கிடையே கர்நாடகாவில் பழம்பெரும் சினிமா குடும்பத்தை சேர்ந்த ராஜ்குமார் மகன் சிவராஜ் குமார், ஜெயிலர் படத்தில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். மேலும், கேப்டன் மில்லர் என்ற படத்திலும் சிவராஜ்குமார் நடித்திருக்கிறார் வரும் டிச 15ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் நாயகன் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் படங்களில் சிவராஜ்குமார் நடிக்க அழைக்கப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.
இப்போது, கோஸ்ட் என்ற படத்தில் சிவராஜ்குமார் நடித்திருக்கிறார். அந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம்கெர், மலையாள நடிகர் ஜெயராம் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீனி டைரக்ட் செய்திருக்கிறார். லியோ படம் ரிலீஸ் ஆகும் அதே தேதியில், அதாவது வரும் 19ம் தேதி கோஸ்ட் ரிலீஸ் ஆகிறது. இதற்கான புரமோசன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
கோஸ்ட் படத்தின் நாயகன் சிவராஜ்குமார், சமீபத்தில் அந்த படத்தின் பிரமோசன் பணிகளுக்காக மும்பை சென்றிருக்கிறார். அங்கு, கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் பிறந்தநாளை கொண்டாட கமல் அங்கு தங்கி இருக்கிறார். இதையடுத்து, கமல்ஹாசனை சிவராஜ்குமார் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் என்ற முறையில், காவிரி நீர் விவகாரம் குறித்து அவர்கள் இருவரும் பேசியிருப்பார்களா, அல்லது ஜெயிலர், கேப்டன் மில்லர் படங்களை தொடர்ந்து கமல் படத்தில், அவருடன் சிவராஜ்குமார் இணைந்து நடிப்பது குறித்து பேசினார்களா என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.





