சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “கங்குவா”. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திசா படானி நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

“கங்குவா” திரைப்படம் ஒரு வரலாற்று ஃபேன்டசி திரைப்படமாக உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட ரூ.350 கோடிகள் பட்ஜெட்டில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
பொதுவாக சிறுத்தை சிவா திரைப்படங்கள் அனைத்தும் சென்டிமென்ட் கலந்த ஆக்சன் திரைப்படங்களாக இருக்கும். ஆனால் “கங்குவா” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஃபேன்டசி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருவதால் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த நிலையில் பிரபல பாடலாசிரியரும் வசன கர்த்தாவுமான மதன் கார்க்கி “கங்குவா” திரைப்படத்தின் சில காட்சிகளை பார்த்ததாக கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், “கங்குவா திரைப்படம் வழக்கமான சிறுத்தை சிவா படமே கிடையாது. இந்த படத்திற்காக அவர் மிகப்பெரிய அளவில் உழைத்து வருகிறார். இந்த படம் மிகவும் அருமையாக வந்துள்ளது” என்று இத்திரைப்படத்தை குறித்து பாராட்டியுள்ளார்.
அதே போல், “படத்தில் நிறைய புதிய விஷயங்கள் இருக்கும். சூர்யாவின் நடிப்பும் சிறுத்தை சிவா சூர்யாவின் நடிப்பை கையாண்ட விதமும் புதுமையாக இருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார். “கங்குவா” திரைப்படத்திற்கு மதன் கார்கி வசனம் எழுதி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
“கங்குவா” திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பதிலேயே மிகப் பெரிய பட்ஜெட் உடைய திரைப்படம் இதுதான். அதே போல் சூர்யாவின் கெரியரிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளிவரவுள்ளது. மேலும் இத்திரைப்படம் 2D மற்றும் 3D ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களிலும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.





