சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான படம் கங்குவா. கடந்த சில ஆண்டுகளாக நடிகர் சூர்யாவுக்கு பெரிய ஹிட் படங்கள் இல்லாத நிலையில் கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை, ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சூர்யா நடிப்பில் கங்குவா படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகியுள்ளது. இந்த படம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுக்கு முந்தைய காலம் என இரண்டு காலகட்டங்களாக கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது கங்குவா முதல் பாகம் மட்டுமே வெளிவரும் நிலையில், அடுத்து கங்குவா இரண்டாம் பாகம் வெளிவர உள்ளது.
கங்குவா முதல் பாகம் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. கங்குவா படம் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக சொல்லப்படுகிறது. வருகிற அக்டோபர் 10ம் தேதி கங்குவா ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த நாளில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதால் கங்குவா பல படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் சூர்யா, மெய்யழகன் பட இசை வெளியீட்டு விழாவில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் அடையாளம், மூத்த நடிகருக்கு வழிவிட்டு கங்குவா படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக அவரே மேடையில் அறிவித்தார்.
தமிழ் சினிமாவில் புதிய படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் செய்த பிறகு, ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஆனால் முன்பு போல் ஓடிடி தளங்கள் அதிக விலை கொடுத்து புதிய படங்களை வாங்குவதில்லை. ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் போன்ற பிரபல ஹீரோக்களின் படங்களையே மிகவும் குறைந்த விலைக்குதான் ஓடிடி நிறுவனங்கள் வாங்கி வருகின்றன. அதே நேரத்தில் சாட்டிலைட் நிறுவனங்கள் புதிய படங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இதற்கு முக்கிய காரணம் ஓடிடி தளத்தில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகி பெருவாரியான மக்கள் பார்த்து விடுகின்றனர். முதலில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும்போதும் ஒட்டுமொத்தமாக நிறைய பேர் பார்த்து விடுகின்றனர். அதன் பிறகு சாட்டிலைட் டிவியில் படம் ரிலீஸ் செய்யப்படும் போது, போதிய வரவேற்பு இருப்பதில்லை அதனால் டிஆர்பி ரேட்டிங் கிடைப்பதில்லை. அதனால் சாட்டிலைட் டிவி நிறுவனங்கள் புதிய படங்களை வாங்குவதில்லை. அதனால் தங்கலான், கங்குவா படங்கள் சேட்டிலைட் உரிமை இதுவரை பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.





