நடிகர் கார்த்திக்கு 25வது திரைப்படமாக வெளிவந்தது ஜப்பான். ராஜூ முருகன் இயக்கியிருந்த இந்த திரைப்படம், கடந்த ஆண்டு வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதன் பின்னர், தனது அடுத்த அடுத்த திரைப்படங்களை கவனமாக தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்றார் கார்த்தி. இதில் கார்த்தியின் 26வது திரைப்படமாக எடுக்கப்பட்டதுதான் வா வாத்தியார்.
சூது கவ்வும் எனும் அட்டகாசமான திரைப்படத்தை கொடுத்து, முதல் படத்திலேயே பலரையும் கவர்ந்த நலன் குமாரசாமி இந்த திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் என அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. சொல்லப்போனால் நலன் குமாரசாமிக்கு என ஒரு ரசிகர் பட்டாளமும் உருவானது.
ஆனால் அடுத்தடுத்து படங்களை கொடுப்பதில் நலன் குமாரசாமி தொடர்ந்து தாமதம் காட்டியே வந்தார். அவரது அறிவிப்புக்காக பலரும் காத்திருந்தாலும் இதுவரை இரண்டு படங்களை மட்டுமே அவர் இயக்கி இருக்கிறார். அப்படியான சூழலில் கார்த்தி உடன் அவர் கைகோர்த்ததால் ஆரம்பத்தில் இருந்தே வா வாத்தியார் திரைப்படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. முழுக்க முழுக்க கமர்சியல் ரீதியாக மசாலா படமாக, வா வாத்தியார் எடுக்கப்படுவதாக அப்போதே கூறினார்கள். படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி வேடத்தில் வருவதாகவும், அதேசமயம் அவர் தீவிர எம்ஜிஆர் ரசிகராக நடித்திருப்பதாகவும் தகவல் வெளியானது. வில்லன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பதாகவும் கூறப்பட்டது.
இது போக கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் உள்ளிட்டோரும் வா வாத்தியார் திரைப்படத்தில் நடிப்பதாக கூறினார்கள். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த திரைப்படத்தில் இருந்து முதல் பாடல் ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்றது. ஆனால் அதன் பிறகு வா வாத்தியார் திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவே இல்லை. சொல்லப்போனால் சூட்டிங் முடிந்ததா, இல்லை நடக்கிறதா என்பது கூட ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்து வந்தது.
அதேசமயம் கார்த்தி அடுத்ததாக பிரேம்குமார் உடன் இணைந்து பணியாற்றிய மெய்யழகன் திரைப்படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே வா வாத்தியார் தாமதமாவதாக அப்போது பேசப்பட்டது. இப்படியான சூழலில் தற்போது ஒரு வழியாக படம் எப்போது ரிலீஸ் ஆகப்போகிறது என்பதை தெரிவித்துள்ளார்கள். அதன்படி கார்த்தியின் படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் தேதியை குறிப்பிடவில்லை.





