நடப்பாண்டு முதல் பாதியில் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளியானாலும், மிகக் குறைந்த திரைப்படங்கள் மட்டுமே வாகை சூடின. ஆண்டின் தொடக்கத்திலேயே யாருமே எதிர்பாராத வகையில் விஷால் நடித்திருந்த மதகஜராஜா திரைப்படம், 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டி ஆச்சரியத்தை கொடுத்தது.
ஜனவரி மாத இறுதியில் மணிகண்டன் நடிப்பில் குடும்பஸ்தன் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று படக்குழுவுக்கு லாபத்தை கொடுத்தது. தொடர்ந்து, டிராகன் திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.
இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக அளவு ரசிகர்களின் விருப்பத்தைப் பெற்ற திரைப்படம் இது என்று கூறலாம். மிக நல்ல விமர்சனத்துடன், 200 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்தது. இதேபோன்று அஜித்குமாருக்கு வெளியான குட் பேட் அக்லி திரைப்படமும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில், பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் டியூட் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. டிராகன் திரைப்படத்தை தொடர்ந்து, பிரதீப் இந்த திரைப்படத்தில் நடிப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரித்த மைத்ரி மூவிஸ் நிறுவனம் இதனை எடுக்கிறது. சுதா கொங்கராவிடம் உதவியாளராக இருந்த கீர்த்தீஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதே போல் சூர்யாவின் கருப்பு திரைப்படமும் தீபாவளி பண்டிகையை குறி வைத்துள்ளது. ஆர் ஜே பாலாஜி இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பதால் படம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
வாழை திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் பைசன் திரைப்படமும் தீபாவளி பண்டிகையைதான் குறி வைத்துள்ளது. ஏற்கனவே இதன் தமிழ்நாட்டு உரிமையை, பைவ் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இது மட்டுமல்ல, துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் திரைப்படமும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நான்கு திரைப்படங்கள் போக, இன்னும் சில திரைப்படங்கள் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





