வாழ்க்கை என்பது நிச்சயமற்றதாக இருக்கிறது. மனிதப்பிறவி என்பதே மகத்தான ஒரு வாய்ப்பாக இருக்கிறது. இதில் உயிர் வாழ்தலை காட்டிலும் வாழ்க்கையில் பெரிய முக்கியத்துவம் எதுவுமே கிடையாது என்பதுதான் நிதர்சனம். எதுவும் இல்லாமல் இந்த பூமியில் துன்பமான ஒரு வாழ்க்கையை கூட வாழ்ந்து கழித்து விடலாம். ஆனால் உயிருடன் வாழ வேண்டும்.
நேற்று இரவு கரூரில் நடிகர் விஜய் தலைமையில் நடந்த தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 39 உயிர்கள் பறிபோயிருக்கின்றன. இதில் கணவன் மனைவி தாய் தந்தை, பெற்ற பிள்ளைகள் அக்கா தங்கை அண்ணன் தம்பி என பல உறவுகளை இழந்த அந்த குடும்பங்கள் கதறி கதறி அழுது வருகின்றன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலரும் உயிரிழந்த கொடுமை நடந்திருக்கிறது.
போலீஸ் பாதுகாப்பில் குளறுபடி நெரிசலான இடத்தை தந்துவிட்டனர் திமுகவின் திட்டமிட்ட சதி என ஒருபுறம் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. விஜயின் தாமதமான வருகை தவெக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறி விட்டனர் என்று ஒருபுறம் புகார்கள் எழுந்து வருகின்றன. இதில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் இணையத்தில் ஊடகங்களில் பழிகளை சுமத்தி வருகின்றனர்.
ஆனால் இதில் முக்கிய தவறு இழைத்தவர்களாக பார்க்கப்படுபவர்கள் அப்பாவி மக்கள்தான். தனது உறவுகளை இழந்து மனரீதியாக கடும் உளைச்சலை துயரத்தை சந்தித்திருக்கும் அவர்கள் நேற்று சில நிமிடங்கள் யோசித்து இருந்தால் இப்படி ஒரு அசம்பாவிதம் நேர்ந்திருக்காது. அவர்களின் தவறான முடிவும் ஆர்வக்கோளாறும் இன்று உயிர்களை பழிவாங்கியிருக்கிறது.
நடிகர் விஜய்க்கு வரும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது. திரும்பிய பக்கம் எல்லாம் கூட்டம் திரண்டு விடுகிறது. அந்த சூழலில் கைக்குழந்தைகளையும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளையும் வயதானவர்கள் முதியவர்கள் என பலரும் அந்த கூட்டத்தில் வந்து சிக்கிக்கொள்ளலாமா? ஒரு திரையில் பார்த்த நடிகனை நேரில் பார்க்க அப்படி ஒரு ஆர்வமா? உயிரை விட அந்த நடிகரின் நேரடி தரிசனம் அவ்வளவு முக்கியமா?
யாராக இருந்தாலும் எந்த நட்சத்திர நடிகராக இருந்தாலும் அவரும் சாதாரண மனிதன்தான். டிவியில் நேரலையில் பார்க்கும் அதே முகம் அதே உருவம்தான் நேரிலும் தெரிய போகிறது. அதுவும் கூட்டத்தில் தள்ளுமுள்ளுவில் சிக்கிக்கொண்டு சரியாக பார்க்க முடியாமல் போகலாம். ஆனால் வீட்டில் இருந்தபடியே டிவியிலும் அல்லது இருக்கும் இடத்தில் இருந்தே செல்போனிலும் பார்த்துவிட்டு போகலாம். உங்கள் அன்பை தேர்தல் நாளில் வாக்கு செலுத்துவதில் காட்டியிருக்கலாம். இப்படி அநியாயமாக உயிரை பலி கொடுத்துதான் நடிகன் மீதான அன்பை வெளிப்படுத்த வேண்டுமா? அநியாயமாக 39 உயிர்களை பறிகொடுத்த பிறகு இனியாவது தமிழக மக்கள் திருந்துவார்களா?





