தமிழ் சினிமாவில் தனது அழுத்தமான படங்களால் ரசிகர்களின் மனங்களை வென்றவர் இயக்குனர் பாலா. சேது பிதாமகன் நந்தா நான் கடவுள் பரதேசி வணங்கான் என பாலா இயக்கிய படங்கள் எல்லாமே மற்ற படங்களை விட தனித்துவமான கதைக்களத்தில் உருவானவையாக இருக்கின்றன.
நடிகர்கள் விக்ரம் சூர்யா ஆர்யா விஷால் அதர்வா போன்றவர்களை மாறுபட்ட கேரக்டரில் நடிக்க வைத்தவர். இயக்குனர் பாலாவிடம் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிசெய்தவர் சசிக்குமார். சேது படத்தில் அவர் உதவி இயக்குனராக செயல்பட்டுள்ளார். மேலும் அமீர் இயக்கிய பருத்தி வீரன் ராம் போன்ற படங்களிலும் சசிக்குமார் உதவி இயக்குனராக இருந்தவர்.
அதன்பிறகு சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கிய இயக்குனரான சசிக்குமார் இப்போது நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.
சென்னையில் சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. சிறந்த திரைப்படமாக டூரிஸ்ட் ஃபேமிலி படம் 2வது இடத்தை பிடித்தது. மேலும் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த சசிக்குமாருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகர் விருது பெற்ற நடிகர் சசிகுமாருக்கு இயக்குனர் பாலா வாழ்த்து மடல் எழுதியிருக்கிறார். அந்த பாராட்டு மடலில் பாலா கூறியிருப்பதாவது, பேரன்பு சசி. சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு நீ சிறந்த நடிகனாக விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் மன வெளிப்பாடு தான் இந்த கடிதம்.
கடந்த 25 ஆண்டுகளாக உன்னைப் பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன், பேராற்றல் கொண்டவன். கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்தி சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை, அதை சகலருக்கும் கடத்தும் உன் அன்பை நேரில் மட்டுமல்ல, திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன். உன் இயல்பான எளிமைக்கு இருக்கும் பல ரசிகர்களின் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. இறுதியாக உனக்குள் உறுமிக் கொண்டிருக்கிற அந்த சம்பவக்காரன் சசியை என் இனிய இயக்குனனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன். அண்ணனாக மகிழ்ந்து பாலா என்று அந்த மடலில் குறிப்பிட்டுள்ளார்.





