சினிமாவில் ஹீரோயிசம் காட்டும் ஹீரோக்களை ரசிகர்களை கைதட்டி பாராட்டுகின்றனர். விசிலடித்து தங்களது ஆரவாரத்தை காட்டுகின்றனர். உண்மையில் திரையில் சாகசம் காட்டுவது ஹீரோக்கள் அல்ல, அவர்களுக்கு டூப்பாக நடிக்கும் ஸ்டண்ட் கலைஞர்கள்தான் என்பதை ரசிகர்கள் முற்றிலுமாக மறந்து விடுகின்றனர். ஆனால் ஹீரோக்கள், நிழல் நாயகன்களாக இருந்து புகழ் பெறுகின்றனர்.
உயரமான கட்டிடங்களில் இருந்து குதிப்பது, அந்தரத்தில் பல்டி அடிப்பது, பறந்து பறந்து சண்டையிடுவது என இப்படிப்பட்ட சாகசம் நிறைந்த ஆபத்தான காட்சிகளில் நடிப்பது எல்லாமே, ஹீரோக்களின் டிரஸ் கெட்டப்பில் இருக்கும் டூப் ஸ்டண்ட் கலைஞர்கள்தான். நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோக்கள், அந்த நேரங்களில் சொகுசாக ஏசி கேரவன்களில் ஓய்வில் இருப்பார்கள்.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் விடுதலை படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு ஸ்டண்ட் கலைஞர், ஆபத்தான காட்சியில் நடித்த போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இப்போது சமீபத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் பிரமோ காட்சிக்காக ஷூட்டிங் நடத்திய போது, உயரமான இடத்தில் இருந்து தவறி விழுந்த ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து நேற்று, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) அமைப்பு சார்பில், சென்னையில் ஒரு நாள் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. கமலா தியேட்டரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பாதுகாப்பு அம்சங்கள், மருத்துவ உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்ட படப்பிடிப்பு நிலையங்கள், அவுட்டோர் படப்பிடிப்பு இடங்களில் மட்டுமே பணிபுரிவோம் என அறிவித்துள்ளனர்.
மேலும் அனைத்து கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடு, தீ விபத்து நடக்காமல் தடுக்க உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு, விபத்து நடந்தால் உடனடியாக முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி, பெண் கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு கழிவறை வசதி, உடை மாற்றும் வசதி ஆகியவை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
லைட்மேன் தொழிலாளர்களுக்கு ஹெல்மெட், ரிப்லெக்டிவ் ஜாக்கெட், கிளவுஸ், பெல்ட், காலணி உள்ளிட்ட வசதிகள், ஸ்டுடியோக்களில் உயரமான இடங்களான லைட் வைக்கும் கோடாக்களில் பெல்ட் அணிவது, பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளனர். தொழிலாளர் உயிர் மற்றும் நலன் காக்க இவற்றை கட்டாயமாக நிறைவேற்றித் தர தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்றும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சிறிய தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு வசதிகளை செய்வதில்லை, விபத்து நடந்தால் நஷ்ட ஈடு, நிவாரணமும் தருவதில்லை என்ற புகாரும் கூட்டத்தில் எழுந்தது.





