தமிழ் சினிமாவில் ஒருவரது வளர்ச்சி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு சிலரை உதாரணமாக சொல்லலாம். அதில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் அது இது எது காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். பிறகு மெரினா படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். ஓவியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மெரினா படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து பல படங்களில் நடித்த சிவகார்த்திகேயன், இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருக்கிறார். அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதேபோல் நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து கதாநாயகனாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
விடுதலை படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து சூரி நடித்த படம் கருடன். துரை செந்தில்குமார் இயக்கிய இந்த படத்திலும் சொக்கன் கேரக்டரில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில், கூழாங்கல் பட இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்தில் சூரி நடித்திருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் கொட்டுக்காளி படம் வெளியானது. இந்த படத்தில் அன்னா பெண் கதாநாயகியாக நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் தமிழில் நடித்த முதல் படம் கொட்டுக்காளிதான். இந்த படத்தில் இசையமைப்பாளர் இல்லை. படப்பிடிப்பின் போது இயற்கையில் இருந்த சத்தங்களே இசையாக படத்தில் வந்தது.
கொட்டுக்காளி படம் கடந்த மாதம் 23ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை பார்த்தவர்கள் குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் பலரும் கொட்டுக்காளி படம் குறித்து பாராட்டி பேசினர். ஆனால் பொதுவான ரசிகர்கள் பலரும், இதை எல்லாம் எப்படி படம் என்று சொல்வது, பாலுமகேந்திரா காலத்திலேயே இதுபோன்ற பல படங்களை அவர் தந்திருக்கிறார் என்றும் விமர்சித்தனர்.
இப்போது கொட்டுக்காளி படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வருகிற 27ம் தேதி வெள்ளிக்கிழமை கொட்டுக்காளி வெளியாகிறது. திரையரங்குகளில் சென்று கொட்டுக்காளி படத்தை பார்க்காமல் மிஸ் செய்தவர்கள், வரும் 27ம் தேதி முதல் ஓடிடியில் படத்தை காணலாம். பெர்லின் ரோட்டர்டேம் ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் கொட்டுக்காளி படம் திரையிடப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.





