தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்ட சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 22வது படமாக அமரன், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
மறைந்த தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அவரது பயோபிக்காக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அமரன் படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் முகுந்த் என்ற கேரக்டரில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவரது மனைவியாக தாய் பல்லவி நடித்திருக்கிறார்.
அமரன் படம் தீபாவளியன்று ரிலீஸ் ஆவதால் பண்டிகை கால படமாக ரசிகர்கள் மிக ஆவலாக அமரன் படத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். சமீபத்தில் அமரன் படத்தின் இசை வெளியிட்டு விழா, சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி, டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய இயக்குனர் மணிரத்னம், நான் சாய் பல்லவியின் ரசிகன். அவருடன் விரைவில் இணைந்து செயல்படுவேன் என்று சொன்னது சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல், விரைவில் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவேன் என்று லோகேஷ் கனகராஜ் கூறியதும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது.
இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் குறித்து பேசுகையில், நான் சிறுவயதிலிருந்தே ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். இது கமல் சாருக்கும் நன்றாக தெரியும். ஆனாலும் இவனிடத்தில் நடிப்புத் திறமை உள்ளது. இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று என்னை வைத்து அமரன் படத்தை அவர் தயாரித்திருக்கிறார். அதேபோல் இந்த படம் திரைக்கு வந்த முதல் நாளில் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு கட்டாயமாக பாராட்டு தெரிவிப்பார். அந்த அளவுக்கு இந்த படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது.
அதோடு கோலிவுட் சினிமாவில் அபூர்வ சகோதரர்கள் என்றால் அது கமலும் ரஜினியும் தான் என்று பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயன். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனை இப்படி அபூர்வ சகோதரர்கள் என்று சிவகார்த்திகேயன் விமர்சித்து பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் ரஜினியும், கமலும் திரைத்துறையில் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அவர்களது வாழ்க்கை முறையில், பழக்கவழக்கங்களில், குணங்களில் நிச்சயமாக எதிர் எதிர் குணங்களைக் கொண்ட அபூர்வ சகோதரர்கள் என்பது உண்மைதான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





