தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்திற்கு மேல் கமர்சியல் திரைப்படங்களுக்கு விதை போட்டவர் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் என்று கூறலாம். புரியாத புதிர் என்னும் சஸ்பென்ஸ் திரில்லர் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் கே எஸ் ரவிக்குமார். அந்தத் திரைப்படம் வெற்றி பெற, அங்கிருந்து கமர்சியல் திசைக்கு பயணமாக ஆரம்பித்தார்.
இது இயக்குனருக்கு சரியாக கை கொடுத்தது என்றே கூறலாம். ரஜினிகாந்த் கமல்ஹாசன் சரத்குமார் என முன்னணி நடிகர்களை வைத்து அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக சரத்குமார் வைத்து அவர் இயக்கிய நாட்டாமை திரைப்படம், தமிழ் சினிமாவில் நின்று விளையாடியது.
சரத்குமார் கூடவே இருந்து ஏகப்பட்ட திரைப்படங்களை இயக்கிய கே எஸ் ரவிக்குமார், ரஜினியை வைத்து முத்து, படையப்பா என இரண்டு தரமான வெற்றிகளைக் கொடுத்தார். இதேபோல், கமல்ஹாசனை வைத்து அவ்வை சண்முகி எனும் நகைச்சுவை திரைப்படத்தை வழங்கினார் இயக்குனர். பின்னாளில் இவர்கள் கூட்டணியில் தசாவதாரம் திரைப்படமும் உருவானது.
எந்த ஒரு திரைப்படத்தை இயக்கினாலும், அதில் ஒரு சிறிய காட்சியில் கே எஸ் ரவிக்குமார் வருவார். சொல்லப்போனால் அவரின் வருகைக்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் காத்திருப்பார்கள். இந்த நிலையில் அவரது காட்சி குறித்த சஸ்பென்சை தற்போது உடைத்திருக்கிறார் கே எஸ் ரவிக்குமார். இது குறித்து பேசி இருக்கும் அவர்,
நான் எதற்காக நடிகரானேன் என்று கூட சில சமயம் நினைத்திருக்கிறேன். சில சமயங்களில் நான் பிஸியாக இருக்கும் போதும், வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன். உதாரணமாக நான் எதிரி திரைப்படத்தை இயக்கும்போது, அருள் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். இதற்காக, நாள்தோறும் மதுரைக்கு சென்று அங்கிருந்து காரைக்குடிக்கு போய் சூட்டிங் இல் பங்கேற்பேன். இப்படியாக தொடர்ந்து எட்டு நாட்கள் பயணம் செய்தேன்.
முத்து படத்தில் வரும் இறுக்கியா அணைச்சு உம்ம தருமோ காட்சியில் நான் நடிப்பதாகவே இல்லை. ஒரு கேமரா மேன் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் சார் தான் என்னை நடிக்க வற்புறுத்தி அந்த காட்சியில் இடம்பெற வைத்தார். அதுவும் திரையரங்குகளில் கிளிக் ஆனது. படையப்பா படத்தின் கடைசி ஒரு பாடல் தான் படமாக்கப்பட இருந்தது. அப்போதும் நீங்கள் இன்னும் இடம்பெறவே இல்லையே என்று கேட்ட ரஜினிகாந்த், அந்தப் பாடலில் என்னை நடனமாட வைத்தார். தசாவதாரம் திரைப்படத்திற்கும் இதுதான் நடந்தது என்று கூறி இருக்கிறார். இதைக் கேட்ட ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.





