நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். அவரே இயக்குனராக இதுவரை 4 படங்களை இயக்கி உள்ளார். அதில் ப பாண்டி ராயன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இட்லி கடை என்ற படம் சில மாதங்களில் வெளிவர உள்ளது.
தனுஷ் நல்ல நடிகர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அவரது நடிப்பில் வெளியான பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் வடசென்னை ராயன் போன்ற பல படங்களில் அவரது நடிப்பு மிக அழுத்தமாக சிறப்பாக இருந்தது என்பதையும் யாரும் மறுப்பதற்கு இல்லை.
நடிகராக பாடகராக மட்டுமின்றி பல படங்களை தனது ஒண்டர்ஃபார் பிலிம்ஸ் மூலம் தனுஷ் சொந்தமாக தயாரித்திருக்கிறார். நானும் ரவுடிதான் என்ற படத்தை நடிகர் தனுஷ்தான் தயாரித்தார். அப்போது நடிகை நயன்தாராவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்னையால்தான் இன்று வரை அவர்களது மோதல் கோர்ட் வழக்கு என தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த சூழலில் நடிகர் தனுஷ் நடித்த குபேரா படம் கடந்த 20ம் தேதி வெளியானது. சேகர் கம்முலா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நாகர்ஜூனா உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், ஒரு செங்கல்கை கூட ஆட்ட முடியாது, என்னை யாரும் அழிக்க முடியாது, தம்பிகளா ஓரமா போய் விளையாடுங்க என்றெல்லாம் டயலாக் பேசியிருந்தார்.
தமிழ் இந்தி தெலுங்கு மற்றும் ஆங்கில படங்களிலும் தனுஷ் நடிப்பதால், தன்னை மிஞ்சிய நடிகர் யாரும் தமிழ் சினிமாவில் இல்லை என்கிற மிதப்பில், தெனாவெட்டில் தனுஷ் இப்படி பேசியதாக விமர்சனம் எழுந்தது. நயன்தாராவை தான் அவர் அப்படி மறைமுகமாக பேசினார் என்றும் தகவல் பரவியது. சூப்பர் ஸ்டார் ரஜினி கூட இப்படி மேடையில் பேசியது இல்லையே என பலரும் ஆச்சரியப்பட்டனர்.
தனுஷின் இந்த பேச்சுக்கு சரியான பதிலடி தரும் விதமாக குபேரா படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் அலட்சியப்படுத்தி புறக்கணித்துள்ளனர். உலகளவில் 5 மொழிகளில் வெளியான பான் இந்தியா படம் குபேரா, மொத்தமாக 85 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டாலும், 5 நாட்களில் தமிழ்நாட்டில் மொத்த வசூல் 17 கோடி ரூபாய்தான். அதனால் நித்யானந்தா சாமியார் போல, எனக்கு வச்சான் பாரு ஆப்பு என்ற நிலையில் நடிகர் தனுஷ் இருந்து வருவதாக கூறப்படுகிறது.





