ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குபேரா. தெலுங்கில் அவருக்கு நேரடி இரண்டாவது திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னதாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் தனுஷ். இது தெலுங்கில் சார் என்னும் பெயரில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்த தனுஷ், அடுத்ததாக தனது ஐம்பதாவது திரைப்படமான ராயனில் நடித்து இயக்கினார். இதனைத் தொடர்ந்துதான் அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் குபேரா உருவாகி இருக்கிறது. தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இதனை இயக்கியுள்ளார்.
படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நாகர்ஜூனா நடித்திருக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா வருகிறார். மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.
ஒரு பெரும் தொகையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதையை நகர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் தனுஷ் பிச்சைக்காரன் கெட்டப்பில் நடித்திருப்பது அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. அண்மையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்தது.
ஒரு பெரும் கோடீஸ்வரர் இடமிருந்து ஒரு பெரும் தொகை, நாகர்ஜுனா மூலம் தனுசுக்கு சென்றடைவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருந்தன. படத்தில் தனுஷ் உயிரை கொடுத்து நடித்திருப்பது அதன் ட்ரைலரை பார்க்கும் பொழுதே தெரிந்ததாக ரசிகர்கள் கூறினர். மொத்தம் இந்த திரைப்படம் மூன்று மணி நேரம் ஓடுவதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் சேகர் கமுலா, நான் படத்திற்காக தனுஷை முதல் முறையாக பார்த்த போது, இன்னும் கொஞ்சம் உடல் மெலிய வேண்டும் பலவீனமாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்ட முதல் ஆள் நீங்கள் தான் என்று கலகலப்பாக கூறினார். ஏற்கனவே நான் ஒல்லியாக இருக்கிறேன் என்று தான் மக்கள் கூறி வருகின்றனர் என்றும் தெரிவித்தார். இந்த திரைப்படத்திற்காக அவர் கடும் உணவு கட்டுப்பாட்டில் இருந்து இன்னும் உடல் மெலிந்து இருக்கிறார். அவர் ஒரு சூப்பர் மேன் என்று தெரிவித்துள்ளார்.





