விஜயகாந்த், மதுரையில் பிறந்து வளர்ந்து சினிமா ஆசையால் சென்னைக்கு வந்தவர். கடந்த 1980களில் மதுரையில் திரைப்படங்களை வாங்கி விநியோகம் செய்துக்கொண்டு இருந்த நண்பர் இப்ராகிம் ராவுத்தர் கொடுத்த நம்பிக்கையும் விஜயகாந்த் சினிமா நடிகராக வேண்டும் என்ற ஆசைக்கு காரணமாக இருந்தது.
ஆனால் சினிமா பின்புலம் எதுவுமே இல்லாமல் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் புதுமுக நடிகருக்கு, அன்று முதல் இன்றுவரை தமிழ் சினிமா முதலில் புறமுதுகுதான் காட்டும். வேண்டாம் என்று கூறி விரட்டவே செய்யும். அன்றைய காலகட்டத்தில் அதுதான் விஜயகாந்துக்கும் நடந்தது.
ஸ்டுடியோவில் சென்று விதவிதமான போஸ்கள் புகைப்படங்கள் எடுப்பது, ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்துக்கும் சென்று அந்த புகைப்படங்களை தந்து, நடிக்க ஏதேனும் வாய்ப்பு கொடுங்கள் என கோரிக்கை வைப்பதுதான் விஜயகாந்தின் ஆரம்பகால சென்னை வாழ்க்கையாக இருந்தது. ஆனால் அழைக்க யாரும் முன்வரவில்லை.
ஆனாலும் இனிக்கும் இளமை படம் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயகாந்த், தொடர்ந்து தூரத்து இடி முழக்கம், சட்டம் ஒரு இருட்டறை, சிவப்பு மல்லி போன்ற படங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.
அப்போது நடிகர் குள்ளமணி, பல படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். அவரது குள்ளமான உருவம் காமெடிக்காக பல படங்களில் நடிக்க வாய்ப்பை பெற்றுத் தந்தது. கரகாட்டக்காரன் படத்தில், கவுண்டமணி காருக்கு அருகே சின்ன சைக்கிளை தள்ளியபடி பழைய இரும்புக்கு பேரிச்சம்பழம் விற்பாரே, அவர்தான் குள்ளமணி. ஏனெனில் குள்ளமான நடிகர்களில் அவரை இந்த காட்சி வெகு எளிதாக நினைவுபடுத்தும், அடையாளம் காட்டும்.
குள்ளமணி நடிக்கும் படங்களில், அந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் அண்ணே, விஜயகாந்த் ன்னு ஒரு புதுமுக நடிகர். நல்லா நடிப்பார். அவருக்கு ஏதாவது கேரக்டர் இருந்தால் கொடுங்கண்ணே, என்று சிபாரிசு செய்துக்கொண்டே இருப்பாராம். அப்படி சில படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படி வளர்ந்த விஜயகாந்த், பிறகு தனது படங்களில் எல்லாம் குள்ளமணிக்கு வாய்ப்பு கொடுத்தார். என் வாழ்நாள் முழுக்க நான் நன்றிக்கடன் பட்டவன் என்று குள்ளமணி குறித்து கேப்டன் பலமுறை கூறியிருக்கிறார்.





