கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் பெரும்பாலான ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. பி வாசு இயக்கத்தில் பிரபு குஷ்பு இணைந்து நடித்து சின்னதம்பி படம் வெளியான போது, நடிகை குஷ்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். குஷ்பு கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அதீத ஆர்வம் காட்டினர்.
அண்ணாமலை பாண்டியன் சிங்காரவேலன் கிழக்குகரை பாண்டித்துரை பிரதாப் பிரம்மா நடிகர் ரிக்சா மாமா முறைமாமன் நாட்டாமை என குஷ்பு அடுத்தடுத்த படங்களில் நடிக்க முன்னணி நடிகையாக மாறினார். பிறகு இயக்குனர் சுந்தர் சியை காதல் திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.
சுந்தர் சி – குஷ்பு தம்பதிக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், தொடர்ந்து குஷ்பு படங்களில் நடித்து வருகிறார். சினிமா தயாரிப்பாளராக மாறிய தன் கணவர் இயக்கிய படங்களை தயாரித்தார். மேலும் டிவி சீரியல்களிலும் நடித்த குஷ்பு டிவி சீரியல்களையும் சொந்தமாக தயாரித்தார்.
ஒரு கட்டத்தில் அரசியல் ஆர்வத்தில் திமுகவில் இணைந்த அவர் பிறகு காங்கிரஸ் பக்கம் சென்றார். அதன்பிறகு பாஜகவில் இணைந்த அவர் இப்போது தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக உள்ளார். அரசியல் சினிமா என இரண்டிலும் குஷ்பு ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய், அஜீத்குமார் குறித்து தனது கருத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
சென்னையில் சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, பத்மபூஷன் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். அஜீத்குமார் ஷோபனா பாலைய்யா ஆகிய 3 பேருமே எனக்கு நல்ல நண்பர்கள்தான். அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
விஜய் அரசியலுக்கு வந்ததால், அஜீத்குமாருக்கு விருது அறிவிக்கப்பட்டதாக கேள்வி கேட்டால், நீங்கள் அதை அப்படி பார்த்தால் அதற்கு நான் ஒன்றும் சொல்ல முடியாது. ஏன் அதை இப்படி பார்க்க வேண்டும். அப்படி எல்லாம் கிடையாது. விருது கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைத்துள்ளது. சரியான நபர்களை தேர்வு செய்து விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் எதுவும் இல்லை என்று நடிகை குஷ்பு பதில் கூறியிருக்கிறார்.





