நடிகர் அஜீத்குமார் நடிப்பில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கியது. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜர்பைஜானில் 4 மாதங்கள் வரை ஷூட்டிங் நடந்தது. இந்த படப்பிடிப்பில் பனிப்புயல், கடும்புயல், கனமழை, குளிர் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்ட நிலையில், படம் பாதியில் பிரேக்கப் ஆனது, கடந்த 4 மாதங்களாக படப்பிடிப்பே நடக்கவில்லை.
மேலும் இந்தியன் 2, இந்தியன் 3, கேம் சேஞ்சர், வேட்டையன், விடாமுயற்சி என பெரிய நடிகர்களின் படங்களை ஒரே நேரத்தில் தயாரித்த லைகா புரடக்சன்ஸ் ஒரு கட்டத்தில், நிதி பிரச்னையில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து, விடாமுயற்சி படத்தை பாதியில் நிறுத்தியது. அஜர்பைஜானில் இருந்த படப்பிடிப்பு குழுவும் சென்னைக்கு திரும்பி விட்டது.
அதன்பிறகு, பல நாட்களாகியும் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்குவதற்கான அறிகுறியே இல்லாத நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி படப்பிடிப்பில் இப்போது கலந்துக்கொண்டார். எனினும் மீண்டும் 40 நாட்கள் லைகா புரடக்சன்ஸ்க்கு அஜீத்குமார் கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், ஜூன் 20ம் தேதி முதல் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கும் என கூறப்பட்டது.
ஏற்கனவே படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி, ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழு சார்ந்த சிலர், அஜர்பைஜான் சென்று சில முக்கிய லொக்கேஷன்களை பார்த்துவிட்டு திரும்பியுள்ளனர். அஜீத்குமாருடன் அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் சேர்ந்து நடிக்க வேண்டிய காம்பினேஷன்ஸ் காட்சிகள் அதிகமுள்ளது. இதில் அர்ஜூன் மகள் திருமணம் சமீபத்தில் நடந்துள்ளதால், அவர் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வது சந்தேகமாக உள்ளது.
அதுமட்டுமின்றி இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தின் மூலம் கிடைக்கும் பெரிய வருமானத்தை வைத்துதான் பாதியில் நின்றுபோன விடாமுயற்சி படப்பிடிப்பை நடத்திக்கொள்ள லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், இந்தியன் 2 படத்தில் முதலீடு செய்துள்ள உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட்ஜெயின்ட் மூவிஸ், முதலில் வரும் வருமானத்தில் எங்கள் முதலீட்டு எடுத்துக் கொள்கிறோம். அதன்பிறகு உங்கள் பங்கை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.
இந்தியன் 2 வருமானம் பெரிய அளவில் கைக்கு வரும், கமல் கொடுப்பார் என எதிர்பார்த்து கணக்கு போட்டிருந்த லைகா நிறுவனத்துக்கு, முதலில் எங்கள் முதலீட்டை எடுத்துக் கொள்கிறோம் என்று உதயநிதியின் தயாரிப்பு நிறுவனம் ஆப்பு வைத்துவிட்டது. தீபாவளிக்கு விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்யலாம், வரும் 20ம் தேதி விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்கலாம் என இருந்த லைகா நிறுவனம், இப்போது செய்வதறியாது தவித்து வருகிறது.





