சினிமா, அரசியல், கிரிக்கெட் இந்த மூன்றிலும் நுழைந்துவிட்டால் மிகப்பெரிய பெயர், புகழ், செல்வாக்கு கிடைத்துவிடும். குறிப்பாக பண மழை கொட்டும். சில ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆகி விடலாம். ஏனென்றால், இந்த மூன்று துறைகளுமே அப்படிப்பட்ட சூழலை அதிகமாக கொண்டிருக்கின்றன.
அதே வேளையில் சினிமா, அரசியல், கிரிக்கெட் இந்த மூன்றிலும் தோற்றுப் போவதற்கான வாய்ப்புகளும் மிக மிக அதிகம். ஆனால் இந்த மூன்றிலும் தோற்றாலும், அடுத்த முறை வெற்றி பெற்றால் மீண்டும் வெற்றி பெற்றால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். பழைய தோல்வியை கவனிக்க மறந்து விடுவார்கள்.
கிரிக்கெட்டில், பலமுறை இறுதி போட்டியில் இந்திய அணி தோற்றிருக்கிறது. அதே போல், தமிழக அரசியலில் திமுக, அதிமுக என்ற அரசியல் கட்சிகள் மாறி, மாறி இன்றும் தோற்கின்றன. வெற்றி பெறுகின்றன. அதே போல் ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்கள் தோல்வியடைகின்றன. அடுத்தடுத்து வெற்றி பெறுகின்றன. அதனால் இந்த மூன்று துறைகளிலும் வென்றாலும், தோற்றாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் தர்பார், அண்ணாத்த என்ற இரண்டு படங்களும் ரஜினி நடித்த பிளாப் ஆன படங்கள், இந்த படங்களில் அண்ணாத்த ஓரளவுக்கு வசூலை தந்தாலும் வெற்றி பெற்ற படமாக, ரசிகர்களால் வரவேற்கப்படவில்லை. தர்பார் படம் மிக மோசமான பிளாப் ஆன படமாக இருந்தது. அதே போல் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படம், ரஜினிக்கு சரியான வரவேற்பை தரவில்லை.
கடந்த 9ம் தேதி வெளியான இந்த படம், இதுவரை 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்தது 10 கோடி ரூபாய் மட்டும்தான். முதல் நாளிலேயே பல தியேட்டர்களில் 10 பேர் கூட படம் பார்க்க வரவில்லை. ரஜினியின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் ரூ. 2 கோடிக்கு வாங்கப்பட்ட இந்த படம் , ரூ. 50 லட்சம்தான் வசூலித்துள்ளது. விநியோகஸ்தருக்கு ரூ. ஒன்றரை கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. லால் சலாம் ரஜினிக்கு கர்நாடகாவில் கூட ரசிகர்கள் வரவேற்பு தரவில்லை.
கெஸ்ட் ரோல் என்றாலே, ரஜினி தலைதெறிக்க ஓடும் அளவுக்கு அவரது கேமியோ ரோல் படங்கள் சொதப்புகின்றன. உதாரணமாக வள்ளி, குசேலன் ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது லால் சலாம் படத்துக்கும் அதே நிலைதான். அடுத்து இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ்சை ஹீரோவாக வைத்து எடுக்கும் புதிய படத்தில் ரஜினியை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க அழைத்திருக்கிறார். ரஜினியும் 10 நாட்கள் தேதி தந்திருக்கிறார். ரஜினியின் கேமியோ ராசி, அவரது வழக்கமான படங்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்வது குறித்து தந்தை, மகள் இருவருமே யோசிப்பது மிக நல்லது.





