நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் 47 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். அதுவும் பைரவி படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் அவர், இப்போது தனது 171வது படம் கூலி படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
ரஜினிகாந்த் நடித்த படங்களில் பல படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளன. எனினும் அடுத்தடுத்து தனது சூப்பர் நடிப்பால், ஆக்சனால் வெற்றிப் படங்களை தந்து, பழைய தோல்விகளை ரசிகர்கள் மத்தியில் இருந்து மறக்கடிக்க செய்தவர் ரஜினிகாந்த்.
பாபா, தர்பார், அண்ணாத்த படங்கள் தோல்வியடைந்தாலும் அடுத்தடுத்து கபாலி, பேட்ட, ஜெயிலர் என தன் படங்களை அதிரடியாக தந்து, தன் முந்தைய படங்களின் தோல்வியை ரஜினி காணாமல் செய்து விடுவார். ஜெயிலர் தந்த அமோக வெற்றிக்கு பிறகு ரஜினியின் நடிப்பில் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது.
இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதத்தில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் லால் சலாம். விக்ராந்த், விஷ்ணு விஷால் நடித்திருந்த இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால் படத்தில் 45 நிமிடங்களுக்கு மேல் இந்த படத்தில் ரஜினி நடித்த காட்சிகள் இடம்பெற்றன.
இந்த படம் பயங்கரமான தோல்வியை சந்தித்தது. ரஜினி நடிப்பு, எடுபடாமல் வீணாகப் போனது. இந்த படத்தை ரஜினி ரசிகர்களே பார்க்க விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான முதல் வாரத்திலேயே பல தியேட்டர்களில் கூட்டமின்றி காற்று வாங்கியது. ஜெயிலர் படம் தந்த வெற்றி நாயகனை, லால் சலாம் படம் மூலம் ரஜினியை மொக்கை வாங்க வைத்தார் மகள் ஐஸ்வர்யா என பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் லால் சலாம் படம் வெளியாகி 6 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் இந்த படம் ஓடிடியில் வெளியாகவில்லை. இந்நிலையில் வருகிற செப்டம்பர் 20ம் தேதி லால் சலாம் ஓடிடியில் வெளியாவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அது பொய்யான தகவல். எந்த ஓடிடி நிறுவனமும் இதுவரை லால் சலாம் படத்தை வாங்க முன்வரவில்லை என்று உறுதியாகி உள்ளது. தனது மகள் ஐஸ்வர்யாவால், ரஜினிக்கு இப்படி ஒரு சோதனையா என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.





