தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளாக நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக திரைக்கதை ஆசிரியராக வலம் வருபவர் ஆக்சன் கிங் அர்ஜூன். இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்த படம் பிளாஸ்ட் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
சென்னையில் பிளாஸ்ட் படத்தை பார்த்த பின்பு நடிகர் அர்ஜூன் ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது, இந்த படத்தில் என்னை போலவே அபிராமி பைட் பண்ணி இருக்கிறார். சிறந்த டான்ஸரான ப்ரீத்தி முகுந்தன் இனி சிறந்த பைட்டர் எனவும் அழைக்கப்படுவார். படம் பார்த்தவர்கள் பாராட்டும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த படத்தில் எல்லோருக்கும் நல்ல கேரக்டர் அமைந்துள்ளது. பெண்கள் தைரியமாக சண்டை போட வேண்டும் என்ற திரைக்கதை அருமையாக உள்ளது. இப்போது இருக்குற சமுதாயத்தில் பெண்களை இப்படி வளர்க்கணும் என்கிற எண்ணம் ஏற்படும். நானும் என் பெண்ணை இப்படித்தான் வளர்த்தேன்.
எங்கு அநீதி நடந்தாலும் அதை தட்டிக் கேட்கணும், எதிர்த்து போராட வேண்டும் என்கிற கருத்தை பிளாஸ்ட் படம் சொல்கிறது. வருங்காலத்தில் பள்ளிகளில் தற்காப்பு கலை பாடமாக இருக்க வேண்டும். முதல்வன் பார்ட் 2 வருமா என்று எனக்கு தெரியாது. முதல்வன் படத்துடன் இன்றைய ஆட்சியை ஒப்பிடுவது மகிழ்ச்சி. நான் ரீல் முதல்வன்.
எனக்கு நண்பர் முதல்வர் விஜய் மீது நம்பிக்கை இருக்கிறது. 100 சதவீதம் நல்லது செய்வார். அதற்கான அறிகுறிகள் தெரிகிறது. ஆனால் அதற்கு டைம் கொடுக்க வேண்டும். சனாதனம் என்பது ஒருவகை வாழ்க்கை முறை. தப்பு தண்டா பண்ணக்கூடாது. திருடக்கூடாது. மற்றவர்களின் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது உள்ளிட்ட பல நல்ல விஷயங்களை சனாதனம் சொல்கிறது.
சின்ன வயதில் உங்களை அப்பா அம்மா நன்றாக பார்த்தது போல வயதான காலத்தில் உங்க அப்பா அம்மாவை கடவுள் மாறி நீங்க பார்த்துக்கணும் என்று சனாதனம் சொல்கிறது. சனாதானம் இருக்கக் கூடாது என்றால் உங்க அப்பா அம்மாவை துரத்தி விடலாம். அது தேவையா? சனாதனம் என்பது மதம் அல்ல. ஒரு வாழ்க்கை முறை. எனக்கு புரிந்து விட்டது. மற்றவர்களுக்கும் புரிய வேண்டும் என்று நடிகர் அர்ஜூன் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





