இயக்குனர் பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில்தான் தினேஷ் கலையரசன் நந்திதா ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்களும் நடிகர் நடிகைகளாக அறிமுகமானார்கள். இவர்கள் அனைவருமே இப்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தில்தான் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடிகர் அட்டக்கத்தி தினேஷ் ஒரு நாள் கூத்து அண்ணனுக்கு ஜே விசாரணை தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் குக்கூ என பல படங்களில் நடித்தார். பேட்ட படத்தில் நடிகர் ரஜினியுடன் அவரது கேங்ஸ்டரில் ஒருவராக நடித்திருந்தார். குக்கூ படத்தில் கண் பார்வையற்றவராக அட்டக்கத்தி தினேஷ் நடிப்பு ரசிகர்களின் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றது.
கடந்தாண்டில் வெளியான லப்பர் பந்து படத்தில் கெத்து என்ற பெயரில் பெயிண்டர் பூமாரி என்ற கேரக்டரில் கிரிக்கெட் வீரராக நடித்திருந்தார். இந்த படத்தில் மற்றொரு நாயகனாக ஹரீஷ் கல்யாண் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. அட்டக்கத்தி தினேஷை அதன்பிறகு கெத்து தினேஷ் என்றும் ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்து விட்டனர்.
எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் அதில் அட்டக்கத்தி தினேஷ் மிக அழுத்தமான நேர்த்தியான அதே நேரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர். அதே நேரத்தில் கேரக்டருக்காக தன்னை வருத்திக்கொள்பவர். விசாரணை படத்தில் தினேஷ் அவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கவில்லை என்றால் அந்த படம் உருவாகியே இருக்காது என்று பலமுறை இயக்குனர் வெற்றிமாறன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் அட்டக்கத்தி தினேஷ் கூறியதாவது, சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு எனக்கு கூச்ச சுபாவம் அதிகமாக இருந்தது. அதனாலேயே காலேஜ் முடித்ததும் வேலைக்கு சேராமலேயே இருந்து வந்தேன். பிறகு அப்படி இப்படி என்று பல கஷ்டங்களுக்கு பிறகு நடிகனாகி விட்டேன்.
நடிக்க தொடங்கிய பின்பு கேமராவை பார்த்தாலே எனக்கு சிரிப்பு வராது. குக்கூ படத்தில் நடித்த பின்புதான் என் நடிப்பு மேம்பட்டது. வேலை என்பது வேறு வாழ்க்கை என்பது வேறு என்பதை நானும் உணர்ந்து கொண்டேன். லப்பர் பந்து படத்துக்கு பிறகு 100 கதைகளை நான் கேட்டிருக்கிறேன். இருப்பினும் எதுவுமே எனக்கு அமையவில்லை. எனக்கு வேண்டாம் என்றாலும் அதை சிரித்தபடி அமைதியாக சொல்லிவிடுவேன் என்று நடிகர் அட்டகத்தி தினேஷ் கூறியிருக்கிறார்.





