நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் சமீபகாலமாக பெரிய வெற்றிகளை பெற்றது சில படங்கள்தான். அதில் மிக முக்கியமான படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியான இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது.
இதையடுத்து ஜெயிலர் 2 படத்தை தயாரிப்பதாக அப்போதே சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியானது. இதுவரை ரஜினிகாந்த் அவர் நடித்த எந்த படத்திலும் 2ம் பாகத்தில் நடிக்காத நிலையில் ஜெயிலர் படத்துக்கு கிடைத்த அபார வரவேற்பால் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டார்.
தொடர்ந்து லால் சலாம் வேட்டையன் கூலி ஆகிய படங்களில் நடித்து முடித்த ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மிக விரைவில் நிறைவடைய உள்ளது. அடுத்து நடிகர் கமல் தயாரிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் தலைவர் 173 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். மேலும் படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்க உள்ளார். இந்த படம் பேமிலி டிராமாவாக இருக்கும் என்றும் வரும் ஏப்ரலில் படம் ஷூட்டிங் துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைவர் 173 படம் ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல்தான் என்பது உறுதியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் டெய்லர் கேரக்டரில் நடிக்கிறார். கடந்த 1970 காலகட்டத்தில் நடக்கும் கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளது. ஹாலிவுட்டில் தி அவுட் பிட் என்ற படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படம்தான் தலைவர் 173 ஆக உருவாகிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி அல்லது பெரிய தாதா என்கிற கேரக்டரில்தான் மாறி மாறி நடித்து வருகிறார். கபாலி காலா பேட்ட தர்பார் வேட்டையன் கூலி என மாறி மாறி போலீஸ் தாதா கேரக்டரில் அவர் நடித்தார். ஜெயிலர் ஜெயிலர் 2 படங்களை தொடர்ந்து இப்போது மாறுபட்ட டெய்லர் கேரக்டரில் அவர் நடிப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.





