இந்த 2025ம் ஆண்டில் துவக்கத்திலேயே நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி மற்றும் குட்பேட் அக்லி என 2 படங்கள் திரைக்கு வந்துவிட்டன. இதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், அஜீத்குமாரின் ஃபேன் பாயாக இருந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட்பேட் அக்லி படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
குறிப்பாக அஜீத்குமார் ரசிகர்களை குறிவைத்து அவர்களை குஷிப்படுத்தும் விதமாக குட் பேட் அக்லி படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்கி இருந்தார். குறிப்பாக தீனா வரலாறு அமர்க்களம் பில்லா சிட்டிசன் உள்ளிட்ட படங்களை ரெபரன்ஸ் ஆக கொண்டு வெளியான இந்த படம் ஏகே ரசிகர்களை கொண்டாட்டம் போட வைத்தது.
அதனால் தனது அடுத்த படம் ஏகே 64வது படத்தையும் இயக்கும் வாய்ப்பை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே அஜீத்குமார் தந்துவிட்டார். இப்போது வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் பிஸியாக இருக்கும் அஜீத்குமார், வருகிற நவம்பரில் தனது 64வது படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார். 4 மாதங்களில் ஷூட்டிங்கை முடித்து விட்டு மீண்டும் 2026ம் ஆண்டில் மார்ச் மாதம் கார் பந்தயங்களுக்கு சென்று விடுவார்.
இதற்கிடையே ஏகே 64 படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 300 கோடி முதல் ரூ. 350 கோடி என்ற நிலையில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை. வினியோகஸ்தர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை தயாரிக்க முன்வந்த நிலையில், ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் துவங்கியுள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் ப்ரீ ஸ்டோரி டிஸ்கஷனில் இருந்து வருகிறார்.
இப்போதைய கோலிவுட் சூழலில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் 64வது படம் மிகப்பெரிய வசூலை அள்ளுமா எனத் தெரியாது. 300 கோடி 350 கோடி ரூபாய் கடன் வாங்கி பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்தால் போட்ட பட்ஜெட்டை திரும்ப எடுக்க முடியுமா, கடனை திருப்பி செலுத்த முடியுமா, வட்டி கட்ட முடியுமா என்ற குழப்பமும் சந்தேகமும் தயாரிப்பாளர் ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால் தேவையின்றி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ஏகே 64 படத்தை தயாரிப்பதில் இருந்து அவர் பின்வாங்கி விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் எதுவும் வந்தால் அந்த நிறுவனத்துடன் கைகோர்க்கவும் ராகுல் தயாராக இருக்கிறார். இதற்கிடையே இந்த படத்தை அஜீத்குமாரே, ராகுல் பெயரில் தயாரிப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் அஜீத்குமார் அப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்க கூடியவர் அல்ல, அவரை பொருத்த வரை தனது படங்களை தயாரிக்கும் எண்ணமே அவரிடம் சிறிதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.





