சரியாக 2 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி படம் திரைக்கு வருகிறது. வருகிற 2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி அஜீத்குமார், திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்த விடாமுயற்சி படம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது. சில தினங்களுக்கு முன் டீசருடன் இந்த ரிலீஸ் அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் கடந்த 2023ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு எச் வினோத் இயக்கிய துணிவு படம் வெளியான நிலையில், 2 ஆண்டுகள் நிறைவடைந்த சூழலில் அதே போல் பொங்கலுக்கு அஜீத்குமாரின் விடாமுயற்சி படம் ரிலீஸாகிறது. இந்த படம் 2024ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக வேண்டிய நிலையில் ஓராண்டு தாமதமாக வரும் 2025ல் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
அதே நேரத்தில் அடுத்த 3 மாதங்கள் இடைவெளியில் மீண்டும் அஜீத்குமார் ரசிகர்களுக்கு ஒரு செம ட்ரீட் காத்திருக்கிறது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார், திரிஷா நடித்த குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ளது. மே 1ம் தேதி அஜீத்குமார் பிறந்த நாளில், உழைப்பாளர் தினத்தன்று அந்த படத்தை வெளியிட படக்குழு இப்போதே ஆயத்தமாகி வருகிறது.
அதனால் இந்த 2025ம் ஆண்டு துவக்கத்தில் ஒரு படம், மே மாதம் ஒரு படம் என 2 படங்கள் அஜீத்குமார் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக கிடைக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து அஜீத்குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்து அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது.
ஆனால் இன்னும் விடாமுயற்சி படத்தில் ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மீதம் உள்ளது. அஜீத்குமார் திரிஷா நடிக்க வேண்டிய அந்த பாடல் காட்சியை தாய்லாந்து நாட்டில் சென்று படம் பிடிக்க உள்ளனர். வருகிற 13ம் தேதி இயக்குனர் மகிழ்திருமேனி தலைமையில் அஜீத்குமார், திரிஷா உள்ளிட்ட படக்குழு வெளிநாடு செல்கிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா புரடக்சன்ஸ் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த சூழலில் இப்போது நடிகர் அஜீத்குமார், விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் டப்பிங் பேசி வருகிறார். பாடல் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வதற்குள், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தையும் படக்குழு முடித்துவிட உள்ளதால், பாடல் காட்சியை மட்டும் எடிட் செய்து படத்துடன் இணைத்து விட்டால், படம் ரிலீஸ்க்கு தயாராகி விடும். அதனால் ஜனவரி 10ம் தேதி உறுதியாக விடாமுயற்சி திரைக்கு வந்துவிடும் என்று தெரிய வந்துள்ளது.





