தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா சேது படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் இயக்குனர் பாலா. அவரது இயக்கத்தில் வெளியான நந்தா பிதாமகன் அவன் இவன் நான் கடவுள் பரதேசி என ஒவ்வொரு படமும் ஒரு சரித்திரமாக இருக்கிறது. அந்த கதைக்களமும், பாத்திரங்களும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதவை.
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக 2016ம் ஆண்டில் வெளிவந்த படம் தாரை தப்பட்டை. இந்த படத்தில் நடிகர் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த 1000வது படம் என்ற சிறப்பும் இந்த படத்துக்கு உள்ளது. இந்த படத்தில் தெருக்கூத்து இசையை மையப்படுத்தி கதைக்களம் அமைத்திருந்தார் பாலா.
தாரை தப்பட்டை படம் வந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் இப்போது உருவாகி உள்ள படம் வணங்கான். வருகிற 10ம் தேதி வணங்கான் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அருண் விஜய், ரோஷினி வெங்கடேஷ் சமுத்திரக்கனி மிஷ்கின் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
வணங்கான் படம் குறித்து பாலா கூறியதாவது, வணங்கான் என்றால் எதற்கும் வணங்காதவன் அடிபணியாதவன் என்று பொருள். படத்தின் நாயகனும் அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவன்தான். அவன் மனது வைத்தால் தவிர அவனிடமிருந்து யாரும் எதையும் பெற முடியாது.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ஒரு சிறுகதையின் தலைப்புதான் வணங்கான். முறைப்படி அவரது அனுமதி பெற்றுதான் இந்த தலைப்பை படத்துக்கு பயன்படுத்தி இருக்கிறேன். எந்த கதையையும் நான் தீர்மானம் பண்ணுவதில்லை. இந்த சமூகம் எனக்கு ஒரு கதையைத் தருகிறது. அதை கண்டும் காணாமல் விட்டு விடாதே, திரையில் கொண்டு வா என்று என் முதுகை பிடித்து தள்ளுகிறது.
வணங்கான் படத்தில் முக்கியமான ஒரு சம்பவம் வருகிறது. இது உண்மையில் நடந்த சம்பவம். அதை நான் எடுத்து இருக்கிறேன். இந்த உண்மை சம்பவத்தை திரையில் கொண்டு வராவிட்டால், நீ சமூகத்தில் வாழ்ந்தே பயனில்லை என்று எனது உள்மனசு ராத்திரி எல்லாம் என்னை தூங்கவிடாமல் செய்தது. அதனால் தான் அந்த உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்கிறேன் என்று இயக்குனர் பாலா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





