தமிழ் சினிமாவில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஹீரோ நடிகர்களின் சம்பளம் 70 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஒரு படம் ஓடுகிறதோ இல்லையோ ஆனால் சம்பளத்தை மட்டும் கணிசமாக உயர்த்தி விடுவது வழக்கமாகி விட்டது. அதிலும் இப்போதைய நடிகர்கள் மனம்போன போக்கில் தங்களது சம்பளத்தை உயர்த்தி விடுகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் ரூ. 120 கோடி முதல் ரூ. 140 கோடி வரை சம்பளம் வாங்கிய நிலையில், கூலி படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் அவர் ரூ. 200 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி கேட்டதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. நடிகர் விஜய் சம்பளம் ஜனநாயகன் படத்தில் ரூ. 250 கோடி என்று சொல்லப்படுகிறது. நடிகர் அஜீத்குமார் தனது அடுத்த படம் ஏகே 64 படத்துக்கு ரூ. 186 கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல் வெளியானது.
நடிகர் சூர்யா சம்பளம் ரூ. 30 கோடியில் இருந்து ரூ. 60 கோடியாக மாறியுள்ளது. அமரன் படத்துக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 70 கோடியாக உயர்த்தி இருக்கிறார். நடிகர் தனுஷின் சம்பளம் ரூ. 50 கோடியாக உள்ளது. நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க ரூ. 8 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் மாமன் படம் வெற்றிக்கு பிறகு ரூ. 15 கோடி சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி ஹீரோக்கள் தாறுமாறாக சம்பளத்தை உயர்த்தும் நிலையில் இசையமைப்பாளர் அனிருத் சம்பளமும் ரூ. 15 கோடியாக உயர்ந்துள்ளது. இயக்குனர்களும் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் சம்பளம் ரூ. 25 கோடி லோகேஷ் கனகராஜ் சம்பளம் ரூ. 75 கோடி நெல்சன் சம்பளம் ரூ. 50 கோடி இயக்குனர் அட்லி சம்பளம் ரூ. 100 கோடியாக உள்ளது.
இந்த சூழலில் நடிகர் விஜய் சேதுபதியும் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியிருக்கிறார். மகாராஜா படத்துக்கு முன் ரூ. 12 கோடி சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி, அதன்பிறகு தனது சம்பளத்தை ரூ. 18 கோடியாக உயர்த்தியிருக்கிறார். இப்போது தலைவன் தலைவி படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற பிறகு தனது சம்பளத்தை ரூ. 25 கோடியாக அறிவித்திருக்கிறார்.
என்னுடன் நடிக்க வந்த ஹீரோக்கள் இப்போது 50 கோடி, 70 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நிலையில், இப்போதும் நான் குறைவான சம்பளம்தான் வாங்குகிறேன் என்றும் நடிகர் விஜய் சேதுபதி சில தயாரிப்பாளர்களிடம் விளக்கம் தந்திருக்கிறார். அதே நேரத்தில் குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த வளரும் நடிகர் மணிகண்டன் இன்னும் ரூ. 2கோடி சம்பளம்தான் வாங்கிக்கொண்டிருக்கிறார். சம்பள உயர்வு குறித்த ஒரு எண்ணமே இல்லாத ஒருவராகவும் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.





