நடிகர் தனுஷ் நடிக்கும் சில படங்கள் பெரிய வெற்றியை பெறுகின்றன. சில படங்கள் சுமாரான வெற்றியை பெறுகின்றன. எனினும் அவரது படங்கள் மிக மோசமான தோல்வி படங்களாக இருப்பதில்லை. அதனால் அடுத்தடுத்து தனுஷூக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் தொடர்ந்து வருகின்றன.
பிற இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் படங்களில் நடிப்பது மட்டுமின்றி நடிகர் தனுஷே இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பதால் அவரே அவ்வப்போது களத்தில் இறங்கி விடுகிறார். அவர் இதுவரை 4 படங்களை சொந்தமாக டைரக்ட் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தனது மூத்த மகன் யாத்ராவை தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறக்க நடிகர் தனுஷ் முடிவு செய்திருக்கிறார். அவரே இந்த படத்தை தனது வுண்டர்ஃபார் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து அவரே இயக்கவும் முடிவு செய்திருக்கிறார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
கடந்தாண்டில் நடிகர் தனுஷ் நடித்த இயக்கிய இட்லி கடை படம் வெளியானது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற மார்ச் 19ம் தேதி ரிலீஸ் என்று தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படத்தில் தனுஷ் நடிக்கிறார்.
இந்த படத்தில் பராசக்தி படத்தில் நடித்த நடிகை ஸ்ரீலீலா நாயகி என சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தற்போது நடிகை சாய்பல்லவியும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் தகவலையும் படக்குழு தரப்பில் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் டி55 படம் 90 சதவீதம் சென்னையில் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. முழுக்க முழுக்க இந்த படத்தின் கதைக்களம் சென்னையாக உள்ளது. மீதி 10 சதவீதம்தான் வெளியிடங்களில் படமாக்கப்பட உள்ளது. மேலும் இந்த படத்தின் முழுமையான ஸ்கிரிப்டை படித்து பார்த்த நடிகர் தனுஷ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பாராட்டிய தகவலும் வெளியாகி உள்ளது.





