நடிகர் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி சென்னையில் காலமான நிலையில், அவரது உடல் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் அடுத்த நாள் மாலை நல்லடக்கம் செய்ப்பட்டது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், மச்சினன் எல்கே சுதீஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்த இறுதி சடங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கடந்த ஒரு வாரமாக அவரது நினைவிடத்துக்கு வரும் நடிகர் நடிகையா், தமிழ் சினிமாத் துறை சார்ந்தவர்கள், ரசிகர்கள், தேமுதிக வினர் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் இறந்த போது நேரில் வராத நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவக்குமார், அருண்விஜய் போன்றவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்றவர்கள் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதுவும் தேமுதிக அலுவலகத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நுழைந்து, விஜய் அன்று இரவே அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் மறைவை பொருத்தவரை ஒரு நடிகராக, அவரை ரசித்த ரசிகர்கள் பல லட்சம் பேர். 180க்கும் மேற்பட்ட படங்களில் சில படங்கள் எல்லாம் சாகாவரம் பெற்ற படைப்புகளாக இருக்கின்றன. குறிப்பாக கேப்டன் பிரபாகரன், செந்தூரப்பூவே, புலன் விசாரணை, சின்னக்கவுண்டர், சொக்கத்தங்கம், வானத்தை போல, ஊமை விழிகள் என அந்த படங்கள் மெகாஹிட் படங்களாக அமைந்தன.
அவரை பொருத்தவரை பசித்த வயிறுகள் என்ற நிலையை எப்போதுமே விஜயகாந்த் விரும்பியதில்லை. அதனால் யாரை சந்தித்தாலும் அவர் கேட்கிற வார்த்தை சாப்பிட்டீங்களா என்பதுதான். எப்போதுமே மற்றவர்களின் வயிறு நிரம்பியதை பார்த்து, நிறைஞ்ச மனசுடன் வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த்.
அதனால் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள கேப்டன் நினைவிடத்தில், தினமும் மதியம் வருவோர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்ட தேமுதிக சார்பில், மாவட்ட செயலாளர்கள் மூலம் இந்த மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எப்போதுமே இந்த திட்டம் தொடரவும் முடிவு செய்யபப்ட்டுள்ளது. கேப்டன் ஆத்மாவை சந்தோஷப்படுத்தும் இந்த உணவு வழங்கும் திட்டத்துக்கு ரஜினி, கமல், விஜய் போன்ற ஸ்டார் நடிகர்களும் நிதி தந்து உதவ முன்வந்தால் அதுவும் சிறந்த விஷயமாக இருக்கும்.





