நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் சினிமாவுக்குள் நடிகராக வந்தார். இப்போது 2025ம் ஆண்டில் சினிமா பயணத்தில் தனது 50வது ஆண்டு பொன்விழாவை அவர் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். இப்போது தனது 171வது படம் கூலியை முடித்துவிட்டு அடுத்து ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு இருக்கிறார்.
கடந்த 1950ம் ஆண்டில் பிறந்த நடிகர் ரஜினிகாந்த், தனது முதல் படத்தில் நடித்த போது அவரது வயது 24. இப்போது 2025ம் ஆண்டில் 50வது ஆண்டில் அவரது வயது 74 ஆக உள்ளது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வேட்டையன் படம் அவரது 170வது படமாகும். கூலி 171வது படமாகவும் ஜெயிலர் 2 படம் 171வது படமாகவும் உள்ளது. கூலி வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது.
பெரும்பாலான ஹீரோ நடிகர்கள் 50 வயது 55 வயது கடந்து விட்டாலே அப்பா அண்ணன் வில்லன் என வேற கேரக்டர்களுக்கு மாறிவிடுகின்றனர். ஒரு சிலர் மட்டுமே நாயகனாக வலம் வருகின்றனர். அதில் ரஜினிகாந்த் 74 வயதிலும் ஹீரோவாக நிற்கிறார். நடிகர் கமலும் 70 வயதில் ஹீரோவாக தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்து திரும்பி வந்தார். இது எனக்கு ஒரு மறுஜென்மம் போல இருந்தது என்றும் அவரே பலமுறை கூறி இருக்கிறார். இந்த சூழலில் 74 வயதிலும் அவர் ஓய்வின்றி தொடர்ந்து நடிப்பது அவர் மீது அதிக அன்பு கொண்டவர்களுக்கு வருத்தம் தருகிறது.
சீனியர் நடிகர்கள் அமிதாப் பச்சன் சிவாஜி கணேசன் போல அவ்வப்போது ஏதேனும் முக்கிய படங்களில் கேமியோ ரோல் செய்துவிட்டு ரஜினி ஓய்வு எடுக்கலாமே, இனியும் அவர் ஹீரோவாக உடலை வருத்திக்கொண்டு நடிக்கவும் வேண்டுமா என அவரது ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே போல் அடிக்கடி ரஜினி இந்த படத்துடன் ஓய்வை அறிவித்து விடுவார் என்ற பரபரப்பும் பலமுறை நடந்திருக்கிறது.
சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை லதா ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது அவரிடம், ரஜினிகாந்த் ஓய்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதைப்பற்றி நாங்கள் எதுவும் யோசிக்கவில்லை. அதைப் பற்றி யோசித்தால் தானே ஏதாவது சொல்ல முடியும்? என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதன்மூலம் ரஜினி ஓய்வு குறித்து அவரது குடும்பத்தினர் யோசிக்க கூட இல்லை என்பது தெளிவாகி விட்டது. அதனால் ரஜினி தொடர்ந்து நடிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.





